முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒன்பது பௌத்த விகாரைகள் படையினரின் உதவியுடன் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினா் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவொரு பௌத்த விகாரைகளும் இருந்ததில்லை என்றும் ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் படையினரின் உதவியுடன் பௌத்த விகாரைகள் பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவா் குற்றம் சுமத்தினார்.
மாங்குளம், ஒட்டுசுட்டான், மன்னாகண்டல், வட்டுவாகல், கொக்குளாய் ஆகிய பிரதேசங்களில் பெரிய விகாரைகளும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் சிறிய விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவா் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்த படையினா் தமது வழிபாட்டுக்கு ஏற்ற முறையில் விகாரைகளை அமைத்துள்ளனா். அத்துடன் தென்பகுதியில் இருந்து செல்லும் பௌத்த சிங்கள மக்கள் தங்கியிருந்து வழிபடுவதற்கு ஏற்புடையதாக விகாரைகளுக்கு அருகில் மண்டபங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரவிகரன் கூறினார்.
கொக்குளாய் பிரதேசத்தில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த வருடம் உத்திரவிட்டிருந்தது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவையும் மீறி விகாரை அமைக்கும் பணி படையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.
1996ஆம் ஆண்டு ஓயாத அலை தாக்குதல் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை விடுதலைப் புலிகள் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டம் மீண்டும் படையினர் வசமாகியது.
2010ஆம் ஆண்டில் இருந்து மக்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கி பிரதான இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளிலும் படையினர் முகாம்களை அமைத்துள்ளனர். அவ்வாறு அமைக்கப்பட்ட படைமுகாம்களுக்கு அருகில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.