உந்துருளி மோதுண்டு வீதியில் விழுந்தோர் மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஏறியதில் குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் மடத்தடி உரும்பிராய் மேற்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த பாலன் நடராசா (வயது 58) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
உயிரிழந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் சம்பவதினமன்று இரவு 8.30 மணியளவில் பலாலி வீதி உரும்பிராய் மேற்குப் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியூடாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த நபரை மோதிவிட்டு சென்ற நிலையில்,
உந்துருளியின் மோதுகையால் பிரஸ்தாப குடும்பஸ்தர் தடுமாறி வீதியின் நடுவே வீழ்த் தப்பட்டார்.அச்சந்தர்ப்பத்தில் அவ்வீதியால் வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி வீதியில் வீழ்ந்து கிடந்த குடும்பஸ்தர் மீது சடுதியாக மேல் ஏறியதுடன் அங்கிருந்தும் தப்பித்துச் சென்றுள்ளது.
இதனால் படுகாயமடைந்த பிரஸ்தாப நபரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
சடலமானது பிரேதப் பரிசோதனையின் பின்னர் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்,
பிரஸ்தாப குடும்பஸ்தரை மோதிய உந்துருளி உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச் சென்ற ஆட்டோ சாரதியையும் பொலிஸார் தேடிவருகின்றனர்.