தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து முன்மொழிவு செய் யப்பட்ட தீர்வுத்திட்ட வரைபானது மக்களுடனான கலந்தாலோசனைக்கு பின்னர் மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட நிபுணர்குழுவின் இணைப்பாளர் வி.புவிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு மக்களின் கருத்துக்களை அறிவதற் காக வெளியிடப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவின் இறுதிவரைபை ஆராய்வதற்காக தமிழ் மக்கள் பேர வையின் கூட்டம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்தராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்றையதினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறுதெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து முன்மொழிவு செய்யப்பட்ட தீர்வுத்திட்ட வரைபில் திருத்தங்களை நாம் செய்வதற்கு தமது ஆலோசனைகள், கருத்துக்கள் விமர்சனங்களை முன்வைத்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் கிடைக்கப்பெற்ற கருத்துக்களை உள்வாங்கியதுடன் எங்கள் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும் உள்வாங்கி இத்திருத்தங்களை செய்துள்ளோம். இன்று திருத்தம் செய்யப்பட்டவற்றை உள் வாங்கி மிகவிரைவில் அச்சுப்பிரதியை வெளியிடவுள்ளோம்.
இத் தீர்வுத்திட்டமானது ஏற்கெனவே நாங்கள் முன் வைத்தது போல் பெரியளவு மாற்றங்கள் எதுவுமின்றி திருத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் நாம் ஜேர்மன் முறையில் அமைந்த தேர்தல் முறைமை பற்றி கூறியிருந்தோம் ஆனால் எமக்கு கிடைத்த விமர்சனங்களின் அடிப்படையில் வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மையின மக்கள் மலையகத்தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதித்துவமாது குறைக்கப்படலாம் என்ற அடிப்படையில் செய்யப்பட்ட விமர்சனங்களை கருத்தில் கொண்டு மீண்டும் ஆலோசித்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கிடையில் பொது விடயங்கள் தொடர்பில் எவ்வாறு தொடர்புகள் மேற் கொள்ளப்படவேண்டும் என்பது பற்றியும் மாநிலங்கள் தங்களுக்கிடையிலான திட்டங்கள் தொடர்பில் இரு மாநிலங்களும் கலந்தாலோசித்து செயற்படவேண்டும் என்ற விடயத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிகுறைந்த நியமங்களை வரையறுப்பது தொடர்பில் மத்திய அரசுடன் சேர்ந்ததான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்பதை கூறியுள்ளோம். குறிப்பாக கல்வி, சுகாதாரம், மருத்துவம் என்பவற்றில் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளோம்.
ஆளுநருக்குரிய பதவிகள்ல் தன்னுடைய அரசியல் அமைப்பினால் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறி செயற்படுமிடத்தில் அவரை எவ்வாறு விலக்கவேண்டும் என்பது பற்றி தெரிவித்துள்ளோம்.
வட கிழக்கு மாகாணத்தில் அவசரகால சட்ட நிலைமைகள் முதலமைச்சினால் பிரகடனப்படுத்தப்படலாம் என்பது பற்றியும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படலாம் என்பது பற்றியும் திருத்தங்கள் செய்துள்ளோம்.
மேலும் தமிழ் மக்கள் வடகிழக்கு மாகாணத்தில் எவ்வாறு ஒரு தேசமாக, மொழி, நிலப்பரப்பு, பொருளாதாரம், கலைபண்பாடு என்ற அடிப்படையில் எவ்வாறு ஒன்றாயிருந்து நிர்ணயிப்பது என்பது தொடர்பாக இத் தீர்வுத்திட்டம் வரையப்பட்டுள்ளது.
அந்தவகையில் முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்களால் தான் தீர்வுத் திட்டம் தயாரித்து தர முடியும் அதேபோல் மலையக மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வுத்திட்டங்களை அவர்கள் உருவாக்கி தரும் பட்சத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து உள்வாங்குவதற்கு தயாராக உள்ளோம்.
தமிழ் மக்கள் சார்பில் முன்வரைபு ஒன்று வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இன்றி தமிழ் மக்களின் நலன்களுக்காக இத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
இத் தீர்வுத்திட்டத்தை நாம் தமிழ் மக்க ளின் நலன்களின் அடிப்படையில் தான் முன் வைத்துள்ளோம். எந்தவிதமான உரிமை கோரலையும் நாங்கள் செய்யவில்லை எனவே யாருடனும் இது தொடர்பாக பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.
இத்திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் முன் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்கள் சிவில் அமைப்புக்கள் சேர்ந்து சிங்கள தரப்புடன் உடன்பாடு ஒன்றுக்குவரவேண்டும்.
நம் பிரதிநிதிகள் ஊடாகவும் முதலமைச்சர் ஊடாகவும் எமது அமைப்பின் ஊடாக வும் சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் இத் தீர்வுத்திட்டத்தை கொடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.