பொருத்துவீடு-அனல்மின்-நீர்மாசு மாற்றுத் திட்டத்தைக் கோரி யாழில் நேற்று போராட்டம்!

0
163
9696வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தைத்தை மாற்றி கல் வீடுகளை வழங்குமாறு கோரியும், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, நேற்றைய தினம் யாழ்.நகரில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று காலை பத்து மணியளவில் யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூகமட்ட அமைப்புக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியனவும் இணைந்து கொண்டு குரல் கொடுத்திருந்தன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீண்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற, புனர் நிர்மான அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65,000 பொருத்து வீடுகள் நமது பிரதேச காலநிலைக்கும், சமூக பண்பாட்டுச் சூழலுக்கும் முற்றிலும் பொருத்தமற்றனவாகும்.
மக்களின் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் இப் பொருத்து வீடுகள் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சமூக ஆர்வலர்களும், துறைசார் நிபுணர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனவே, இத்தகைய இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி எமது காலநிலைக்கும், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர கல் வீடுகளை அமைத்து வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவும் அனல் மின் உற்பத்திச் செயற்பாட்டை இன்று கைவிட்டு வருகின்றன.
இந்தியா, சீனா போன்ற நாடுகளும் தத்தமது அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையிலே இயற்கை வளம் நிறைந்த திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில், மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. விவசாயம், மீன்பிடி மற்றும் கடல் வளம் நிறைந்த, நீலத் திமிங்கிலங்கள் வாளும் இக்கடற்பரப்பின் இயற்கைச் சமநிலையைக் கெடுப்பதாக அமைகின்ற இந்தச் செயற்பாடானது, சம்பூர் பிரதேச மக்களின் வாழ்வைச் சிதைப்பதாகவும் அமைகின்றது.
அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேற்கு பகுதிகளுக்கு மழையைத் தரும் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் நுளைவாயிலான கிழக்கு இலங்கையின் சம்பூர் பிரதேசத்தில் காற்றில் கலந்துவிடப்படவுள்ள இம் மின் உற்பத்தி நிலையத்தின் புகை, சாம்பல் கழிவுகள் எமது நாட்டின் வளிமண்டலத்தை நாசப்படுத்தி உயிர்வாழ்வைக் கேள்விக்குறியாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த அனல் மின் நிலையத் திட்டத்தைக் கைவிட்டு சூரிய சக்தி அல்லது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் ஊடாக மின்சார தேவையையும், எதிர்கால மனித இருப்பையும் உறுதிப்படுத்த முடியும். என இப்போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இப்போரட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here