தேசியத் தலைவர் மீது அவதூறு பரப்பும் சம்பந்தன் கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

0
956

Arikkai TCCஎதிர்வரும் சனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி  தேர்தல் தொடர்பாக கடந்த 31.12.2014 அன்று வெளியான Indian Express நாளிதழில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள்  வழங்கியிருக்கும் நேர்காணலில் “குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது” என சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழினத்துக்கு அடையாளம் தந்த தேசியத் தலைவரையும், தமிழின அழிப்பில் முதன்மையானவரான மகிந்த ராஜபக்சவையும் சம்பந்தன் அவர்கள் சமப்படுத்தியமை  உலகத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது .

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு தேசியத் தலைவரை புகழ்வதும்,  சில சந்தர்ப்பங்களில் தேசியத் தலைவரை அவமதித்து பேசுவதும், விடுதலைக்கான எமது நியாயமான போராட்டத்தை சம்பந்தன்அவர்கள் அவமதிப்பதையே கோடிட்டு காட்டுகின்றது.

உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈடுஇணையற்ற மாபெரும் தலைவனை அவமதிப்பது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைப்பதற்கு இணையாகவே பார்க்கப்பட வேண்டும் . திரு சம்பந்தன் அவர்களின் இக் கருத்துக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இதேவேளை, சம்பந்தன் அவர்கள் பொறுப்பற்ற முறையிலும் , போராட்டத்துக்கு நேர்மையற்ற முறையிலும் செயற்படுகிறார் என்ற தமிழ் மக்களின் கருத்துக்களையும் இத் தருணத்தில் பதிவு செய்யவிரும்புகிறோம்.

நடைபெற இருக்கும் சனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு என்பது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்யானதென வரலாற்று ரீதியாக  நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்  திரு. சம்பந்தன் போன்ற மிதவாதத் தலைவர்களின் விட்டுக் கொடுத்தல்களாலும் தூரநோக்கற்ற சிந்தனையின் விளைவாலுமே எமது மக்கள் பேரவலங்களை சுமக்க வேண்டிவந்தது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் தமிழின அழிப்பு என்ற விடயத்தில் ஓரேநிலைப்பாட்டையே எடுத்துள்ளதை எமது மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அவ்வாறான சூழலிலேயே எதிர்வரும் சனாதிபதித் தேர்தலும் இடம்பெறவுள்ளது.

இத் தருணத்தில், எமது மாவீரர்களினதும் மக்களினதும் தியாகங்களை மனதிலிருத்தி, சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்குள் கரைந்து போகாமல், அரைகுறைத் தீர்வுகளுக்குள் எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை புதைத்து விடாமல், எமது தேசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றில் உறுதியாக இருந்து  செயற்படவேண்டும் என அனைவரையும் இத்தருணத்தில் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.


                                                       ”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
நியூசீலான்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
அவுஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சுவீடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பின்லான்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
நெதர்லாண்ட் தமிழர் பேரவை
பெல்ஜியம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்

 

Arikkai TCC 1-2015-page-001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here