முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை காலமும் சட்டத்துக்கு முரணான வகையில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
தனிநபர் பாதுகாப்பு தேவைகளுக்கு இராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானதாகும். இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகள் மாற்றீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செயலாளர் ஹெட்டியாராச்சி கூறினார்.
எவ்வாறான போதும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் செயலாளர் உறுதியாக தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி தீர்மானத்தை பாதுகாப்புச் சபை நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு மட்டுமன்றி அனைத்து மிக முக்கியஸ்த்தர்களினதும் ( பிரபுக்கள்) பாதுகாப்புக்கு இராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகளை மாற்றீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபுக்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக விசேட பயிற்சி அளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரே இராணுவத்தினருக்கு பதிலாக மாற்றீடு செய்யப்பட்டுள்ளனர் என்றும் செயலாளர் இதன் போது கூறினார்.
யுத்தத்தின் போது,அவசர நிலமைகளின் போது சம்பந்தப்பட்ட அதிகார நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து முறையான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலே ஒழிய இராணுவ அதிகாரிகளை வேறு எந்த சந்தர்ப்பத்திலும் தனிநபர் அல்லது பிரபுக்களின் பாதுகாப்புத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது.
இதுவரை நடைமுறையிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இராணுவ பாதுகாப்பு சட்டத்துக்கு முரண்பட்டது. இதனை கவனத்திற் கொண்டே இராணுவ அதிகாரிகளை நீக்கி விட்டு அதற்கு பதிலாக பிரபுக்களுக்கான விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது எவரையும் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படவில்லை.
அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள போது மாத்திரம் விதிவிலக்காக இராணுவத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரபுக்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட முடியும்.
அவசரகால சட்டம் அமுலில் இல்லாத நிலையிலும் தனிநபர் பாதுகாப்புக்காக தொடர்ந்தும் இராணுவத்தினரை பயன்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானது என்றும் செயலாளர் தெரிவித்தார்.
தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர்களுக்கான பாதுகாப்புப் படையணியில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் சபை கடந்த மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னரே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த போதும் இதற்கான நடைமுறை சாத்தியம் குறித்து இதுவரை காலமும் ஆராய்ந்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் பிரபுக்களின் பாதுகாப்புக்கென தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் இந்த மாற்றீடானது மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.