யாழில் காணி சுவீகரிப்பு: அரச அதிபரைச் சந்தித்து பேசிய சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர்!

0
230

sivajiயாழ். தீவகத்தின் மண்கும்பான் பகுதியில் சுமார் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் -60 ஏக்கர் காணிகளும் , ஆனைக் கோட்டைப் பகுதியில் 16 பரப்புக் காணியும் இராணுவத்தினரின் தேவைகளுக்காகச் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவிருந்த நிலையில் யாழ்.பிரதேச நில அளவை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்களும், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற, வடமாகாண சபை உறுப்பினர்களும் இன்று வெள்ளிக் கிழமை( 08-04-2016) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற குறித்த மறியல் போராட்டத்தில் மக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம்,விந்தன் கனகரத்தினம், பாலச்சந்திரன் கஜதீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ-கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு காணிச் சுவீகரிப்புக்கு எதிராகக் குரலெழுப்பினர்.

மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து யாழ். மாவட்டச் செயலகத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் காணிச் சுவீகரிப்புத் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் போது காணிச் சுவீகரிப்புக்கு எதிரான தமது கண்டனங்களைத் தெரிவித்ததுடன் யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் காணிச் சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்குக்கும், காணிக்கும் பொறுப்பாகக் காணப்படும் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனையும் சந்தித்துத் தமது ஆட்சேபணையை வெளியிட்டனர்.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம் .கே .சிவாஜிலிங்கம்,

காணிச் சுவீகரிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடில் எதிர்வரும் – 11 ஆம் திகதி மாதகல் பகுதியில் காணிச் சுவீகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இந் நிலையில் அன்றைய தினம் அடையாள எதிர்ப்புப் போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெறும் எனவும், அதனைத் தொடர்ந்து மகஜர்கள் உரிய தரப்பினர்களுக்குக் கையளிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here