யாழ்.மாவட்டத்தில் படையினரின் தேவைகளுக்காக பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் சுவீகரிப்பிற்காக இன்று அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் இன்று காலை 8.00 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக நடைபெறும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் வரையிலான காணி மற்றும் ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணி ஆகியன படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்காக இன்று காலை நிலங்கள் அளவீடு செய்யப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தை நடத்த தீர் மானிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசியல்வாதிகள மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வலுச் சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
கடற்படைமுகாம் மற்றும் இராணுவ முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணியினை மேற்கொள்ள கூடாது என நில அளவை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்.திருநெல்வேலியில் உள்ள நிலஅளவை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் குறித்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தின் போது நில அளவை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் இந்த நில அளவையை முற்றாக நிறுத்தும் அதிகாரம் எமக்கு இல்லை. ஆனால் இன்றைய தினம் உங்கள் போராட்டத்தின் மத்தியில் இன்று மேற்கொள்ளவிருந்த நில அளவை நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோமே தவிர முற்றாக நிறுத்தவில்லை. முற்றும் முழுதாக நிறுத்தும் அதிகாரமும் எமக்கு இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.