சிங்களவர் ஒருவர்கூட வாழாத நயினாதீவுப் பகுதியிலே வலுக்கட்டாய மாக பிரமாண்டமான புத்தர் சிலை அமைக்க வேண்டுமென அரசாங்கம் முனைவது மீண்டுமொரு போர்க் களறியை ஏற்படுத்துவதாகவும், தமிழர்கள் மீது வலிந்தொரு போரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதை உணர்த்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டுத் திட்டத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் நயினாதீவில் அமைக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நயினாதீவில் 67அடி உயரமுடைய புத்தர் சிலை அமைப்பது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையும் சிங்கள மயமாக்கலின் வடிவமென்பதை யாரும் நிராகரிக்க முடியாது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நோக்கிய தமிழர்களுடைய வாழ்வியலில் மாற்றங்களை கொண்டு வரக்கூடிய அவர்களை அழிக்கக் கூடிய செயற்பாட்டை அரசாங்கம் கச்சிதமாக செய்வதாகவும் குற்றம் சுமத்தினார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளை கடந்த காலங்களில் மகிந்த அரசாங்கம் இராணுவத்தை வைத்து இராணுவ பிரசன்னத்தோடு செய்தது. சமாதானம் பேசிக்கொண்டு தற்போது மைத்திரியும், ரணிலும் அதனையே செய்கிறார்களா? என்ற சந்தேகம் தமிழர்களுக்கு எழ ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.