மைத்திரிபால சிறிசேனா வடக்கு மாகாணத்துக்கு வரவுள்ளார். இதையொட்டி வவுனியா மாவட்டத்தில் சந்தேகப்படும் இடங்கள், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனை செய்து வருகின்றனர்.
அத்தோடு மைத்திரி பங்கேற்கும் நிகழ்வுப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேங்கள் என்பனவும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
நாளை வடக்கு மாகாணத்திற்குச் செல்லும் மைத்திரி வவுனியாவுக்கும் செல்லவுள்ளார். வவுனியாவில் இராணுவக் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்ட வீட்டுதிட்டத்தைத் திறந்து வைத்து அவர்களிடம் கையளிக்கவுள்ளார்.
இந்நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார், இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏ – 9 வீதியில் வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடி உட்பட பல்வேறு இடங்களில் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை மறித்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக வவுனியாவில் வர்த்தக நிலயங்கள் அனைத்தினுடைய விவரங்களும் பொலிஸாரால் திரட்டப்பட்டிருந்தது. அத்தோடு மைத்திரியின் விஜயத்தை முன்னிட்டு காலதாமதமாக இதுவரை திருத்தப்படாதிருந்த வீதிகளான பசார் வீதி உட்பட 4 வீதிகள் துரித கதியில் திருத்தப்பட்டு வருவதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.