வவுனியாவில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் இன்று (30) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வடபகுதிக்கான தனியார் போக்குவரத்து சேவை வவுனியாவில் பாதிப்படைந்தது.
வவுனியா பஸ்நிலையப் பகுதியில் பயணி ஒருவரை ஏற்றுவது தொடர்பில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி, நடத்துனர்களுக்கிடையில் நேற்று (29) காலை ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்ததாக இலங்கை போக்குவரத்து சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் ஆகிய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தம்மால் இலங்கை போக்குவரத்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பேருந்து ஆகியவற்றுக்கிடையில் இணைந்த சேவை அட்டவணை ஒன்று தயாரித்து அதன் அடிப்படையில் வழி அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பிரதேசங்களுக்கும் செல்கின்ற பயணிகள் பலரும் அசௌகரியங்களை எதிர்நோகியிருந்தனர்.