இப்படியாம்..! அப்படியாம்..! – கந்தரதன்

0
317

IMG_2976யுத்தம் ஓய்ந்து 7 வருடங்கள் ஆகவுள்ள நிலையில், தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் வரவினை எதிர்பார்த்திருக்கும் நிலைவலுவடைந்துள்ளது. தாயகத்திலும் புலத்திலும் நாளும் நிகழ்ந்தேறும் வன்கொடுமைகள் இந்நிலையை வலுப்படுத்தியுள்ளன. யுத்தகாலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான ஆட்சியில், சிறிலங்கா முழுவதுமே குற்றச்செயல்களை செய்வதற்கு அச்சமடைந்திருந்தனர். அது ஒருகாலம்.
ஆனால் இன்று வாகனத்தில் வைத்தே, உயிரோடு எரித்து படுகொலை செய்யும் அளவிற்கு அங்கு நல்லாட்சி நிலவுகின்றது. நல்லாட்சியின் நாயகனாக விளங்கும் மைத்திரியே வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் இன்னும் பலமாக உள்ளனர் எனவும் எந்தநேரத்திலும் வான்வழியே வந்து சிறிலங்காமீது தாக்குதல் நடத்தும் பலம் உள்ளதாகவும் அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.
இது வெறும்பேச்சு அல்ல. புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்தே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனாலேயே எங்கள் கைகளினாலேயே எம் கண்ணைக் குற்றவைக்கும் வேலைகளில் சிங்களம் இறங்கியுள்ளது.
எம்மை அடிக்க வருபவனை அடிக்காமல், நாம்தான் உண்மையான தேசியப் பற்றாளர்கள் என களம் இறங்கியுள்ளவர்கள், சிங்களத்தின் ஆடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாவீரர்களை தவறாமல் நினைவிற்கொள்பவர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் முடக்கும் கபடத்தனத்தில் இறங்கியிருப்பதை சிறுபிள்ளைகள் கூட சாதாரணமாகக் கூறிவிடுவார்கள்.
தாயகத்தில் எமது பூர்வீகக் கடலில் சிங்களவன் பாரிய புத்தர் சிலையை அமைக்கிறான். எமது தேசிய நினைவாலயங்களையும் மாவீரர் துயிலும் இல்லங்களையும் அழித்து நிர்மூலமாக்கி இறுமாப்போடு தமது அலுவலகங்களையும் புத்தவிகாரைகளையும் கேளிக்கை விடுதிகளையும் யுத்த நினைவுத்தூபிகளையும் அமைக்கின்றான். இதனையெல்லாம் கண்டும் வராத பழிவாங்கும் உணர்ச்சி, இன்னும் மாவீரர்களை நினைவுகூரும் புலம்பெயர் கட்டமைப்புகள் மீது வரும் நோக்கமென்ன? இது அனைவரையும் சிந்திக்கவைக்கின்றது.
முடிந்தால் நடத்திப்பாருங்கள்….! என்று சவால் விடும் அளவிற்கு புலம்பெயர் நாடுகளின் சட்ட திட்டங்களையும் தமது கையில் எடுக்கின்றனர். கடந்த 20 ஆம் நாள் நடந்த கொலைவெறித்தாக்குதல்கள் இவர்களை வெற்றிக்களிப்பிற்கு இட்டுச்சென்றுள்ளது. மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டு நிகழ்வினை கூறியபடியே நிறுத்திய பெருமை இவர்களைச் சாரும். மண்ணில் விதையாக வீழ்ந்த ஒவ்வொரு மாவீரர்களுக்கும் இந்த இழிசெயல் சமர்ப்பணம்.
வரலாற்றிலே எந்த நாட்டின் படைகளிலுமே இல்லாத ஒழுக்கநெறி உடைய மாவீரர்களுக்கு உரித்துடையவர்களாக நாம் இருப்பதில் பெருமைகொள்ளவேண்டும். இப்படிப்பட்ட மாவீர புனிதர்களுடைய நினைவுசுமந்த விளையாட்டை குழப்புவதற்கு காரணமாக இருந்த ஒவ்வொருவரையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. இதற்கு இவர்களுடைய மனச்சாட்சி (இருந்தால்) நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் புலம்பெயர்தேசங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆட்டம் கண்டுகொண்டிருந்த கட்டமைப்புகள், மீண்டும் வலுப்பெறத் தொடங்கின. இதற்கு கட்டுமைப்புகளினுள்ளே ஊடுருவியிருந்த புல்லுருவிகள் இனம்காணப்பட்டு அகற்றப்பட்டனர். இதன்பின்னர் மீண்டும் வலுவான போராட்டங்கள், மாவீரர் நினைவு சுமந்த அனைத்து நிகழ்வுகளும் வழமைபோன்று இடம்பெறத் தொடங்கின. இதற்கு பிரான்சு தேசத்தின் கிளையின் ஆணிவேராக பற்பல வேலைகளை நன்கு திட்டமிட்டு, அனைவருக்கும் உற்சாகமூட்டி அனைத்து நிகழ்வுகளையும் திறம்பட நடத்த முனைப்புக்கொண்டார் எங்கள் பருதி அண்ணா அவர்கள்.
அவரின் வழிகாட்டலில் மெருகூட்டப்பட்ட பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையும் பல சவால்களையும் தாண்டி மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுக்களை பிரமாண்டமான முறையில் நடத்திவந்தது. இது சிறிலங்கா தேசத்துக்கு பெரும் தலையிடியாகவும் சவாலாகவும் அமைந்திருந்தது.
எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் என்று சர்வதேசத்திற்கே ஒப்புவித்த சிங்கள அரசு, புலம்பெயர் தேசத்தின் எழுச்சிகண்டு கடும் அச்சமடைந்தது.
இதனால் எம்மவர்களையே தமது வியாபாரத்தினூடாக விலைபேசி, ஆணிவேரை சாய்த்தது. ஆணிவேரைச் சாய்த்துவிட்டால், அனைவரின் எழுச்சியையும் அடக்கிவிடலாம் என்று கற்பனைக் கண்கொண்டுபார்த்து இறுதியில் ஏமாற்றத்தையே சந்தித்தது.
இதனால் பொறுக்கமுடியாத சிங்களம் கட்டமைப்பு அலுவலகங்களை உடைக்கக் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. உடனடியாக இதற்கு நன்கு பயிற்றுவித்த ஆட்களை கட்டமைப்பு அலுவலகத்தை சீர்குலைக்க அனுப்பியிருந்தது. அவர்கள் வாய்க்கும் மூளைக்கும் எந்தத் தொடர்புமின்றி கருத்துக்களை முன்வைப்பதும், தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கி முடக்குவதிலும் குறியாக இருந்த அதேவேளை, தேசிய செயற்பாட்டாளர்களின் நெருங்கிய உறவுகளைச் சந்தித்து இப்படியாம்… அப்படியாம்…..என்று செயற்பாட்டாளர்கள் மீது சேறுபூசுவதிலும் இவர்கள் கில்லாடிகளே. இதனால், பல குடும்பங்களிடையேயும், கருத்து முரண்பாடுகள் ஏற்படவைத்த பெருமையும் இவர்களையே சாரும். இவ்வாறு புலம்பெயர் தேசத்தின் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் இலகுவில் மறந்துவிடக்கூடியவை அல்ல.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகின்றது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாகரை இறாலோடை வள்ளுவர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்கும் குடும்பிமலைப் பிரதேசத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றம் செய்வதற்காக எமது இனத்தின் விடுதலைக்காக போராடி, எமது மக்களுக்காக நியாயபூர்வமான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எமது உறவுகளை அடக்கம் செய்த தரவை துயிலுமில்லத்திலுள்ள கட்டடங்கள் அனைத்தும் இடித்தழிக்கப்பட்டு சிங்கள மக்களின் குடியேற்றத்திற்காக காணி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நடைபெறுகின்றது.
இதற்கு நாம் ஒருபோதும் அனுமதியோம். இறந்த உறவுகளின் கல்லறைகளைக் கூட பாதுகாக்கமுடியாதவர்களாக இந்த அரசாங்கம் எங்களை உருவாக்கியுள்ளது. நல்லாட்சி எனச் சொல்லும் அரசாங்கம் அதர்மமான காரியங்களில் ஈடுபடுகின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
துட்டகைமுனுவுடன் எதிர்த்துச் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த எல்லாள மன்னனுக்கு கல்லறை கட்டி வீரவணக்கம் செய்யுமாறு உத்தரவிட்டான் துட்டகைமுனு.
அதேபோல் எமது இனத்துக்காகப் போராடி தமது இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களை நினைவுகூர்வதற்கு அனுமதியளிக்கவேண்டும். அதுதான் நல்லாட்சியின் சமத்துவம். கல்லறைகளை இடித்து நல்லாட்சிக்கு வாக்குகளை வழங்கிய மக்களின் மனங்களை துன்புறுத்தாதீர்கள் எனவும் யோகேஸ்வரன் செவிடன் காதில் ஊதிய சங்காகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறே, புலம்பெயர் தேசத்தில் தேசியக் கட்டமைப்புகளைக் கூறுபோட முனைப்புக்காட்டும் ஒவ்வொருவருக்கும் ஒரு விடயம், நீங்கள் மாவீரர்களின் புனித வித்துடல்களை உங்கள் மனதில் இருத்திச் சொல்லுங்கள், நீங்கள் பயணிக்கும் பாதை நேரானதா? தேசியத்தை நேசிக்கும் பாதைதானா? விடை உங்களின் மனங்களில்தான்.
சிந்தியுங்கள்! சிந்தித்து செயற்படுங்கள்!!
(சூறையாடல்கள் தொடரும்)
(நன்றி – ஈழமுரசு பாரிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here