சிவில் யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் ‘அநேகமாக தவிர்க்கமுடியாதவை’ எனக் கூறி யுத்தக் குற்றங்களை அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபோர்ட் நியாயப்படுத்தியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ் அகதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் அபோர்ட்டின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தனது இரண்டு வருடகால பிரதமர் பதவி தொடர்பில் ‘குவாட்ரன்ட்’ சஞ்சிகையில் எழுதியிருக்கும் கட்டுரையிலேயே டொனி அபோர்ட், இலங்கை யுத்தத்தை நியாயப்படுத்தியுள்ளார். “உலகத்தில் மிகவும் மோசமான சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எடுத்த நடவடிக்கைகளில் சில தவிர்க்க முடியாத சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். ஐ.நா மனித உரிமை விவகாரத்தில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளாமை குறித்து இலங்கை பிரதமர் நிச்சயமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்” என்றும் அபோர்ட் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை விடயத்தை இலங்கை அரசாங்கத்திடம் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் எழுப்பி வந்தததாக வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் கூறியிருந்த நிலையில் அதற்கு முரணான கருத்தை அபோர்ட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘சித்திரவதைகளை நியாயப்படுத்தியிருந்த அபோர்ட் தற்பொழுது யுத்தக் குற்றத்தை நியாயப்படுத்தியிருப்பதாக தமிழ் அகதிகள் கவுன்சிலின் ஏற்பாட்டாளர் ட்ரெவோர் கிரான்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மிருகத்தனமான நிர்வாகத்துடன் நட்புப்பாராட்டிய வரலாறுடைய அபோர்டின் கருத்துக்கள் யூகிக்கக் கூடியவை ஆனால் வெறுக்கத்தக்கவை” என அவர் கூறியுள்ளார்.
2015 மற்றும் 2012 ஐ.நா அறிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்த வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கிரான்ட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, “மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகளை கடைப்பிடிக்காத இலங்கை முன்னாள் ஜனாதிபதியை மகிழ்விக்க அபோர்ட் தீர்மானித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது”என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரசின் தேசிய பேச்சாளர் சாம் பரி தெரிவித்தார்.
அபோர்டின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய பணிப்பாளர், எலான் பியர்சன் தெரிவித்துள்ளார்.
“இறுதிக்கட்ட யுத்தம் மிகவும் இரத்தம் தோய்ந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா கூறியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ‘சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை’ எனக் கூறுவதானது தவறான தலைவர்களுக்கு பச்சைக் கொடி காட்டுவதைப் போன்று அமைந்துவிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அது மாத்திரமன்றி பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் முகங்களில் அறைந்ததைப் போன்றுள்ளது” என்றும் சாம் பரி சுட்டிக்காட்டியுள்ளார்.