வவுனியா, கல்மடு – ஈச்சங்குளம் வீதியில் 2007ஆம் ஆண்டு 57ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரால் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்ட கணவனைத் தேடி மூன்று பெண்பிள்ளைகளுடன் கடந்த 09 வருடங்களாக பல இடங்களுக்கு ஏறி இறங்கி வருவதாக பேரின்பராஜா பாலேஸ்வரி கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று(29) ஆரம்பமான காணாமல்போன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தபோதே அவர் இதனைக் கூறினார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பேரின்பராஜா பாலேஸ்வரி விளக்கமளிக்கையில்கூறியதாவது: நாங்கள் முல்லைக்குளம், கல்மடுவில் வசிக்கின்றோம். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி எனது கணவர் எமது பகுதியில் வசிக்கும் ஒருவருடன் வீட்டில் இருந்து மோட்டர் சைக்கிளில் வவுனியா நகரத்திற்கு சென்றார்.
காலையில் சென்றவர் 11.30 மணியளவில் வங்கியில் பணத்தை வைப்புச் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஈச்சங்குளத்திற்கும் – கல்மடுவிற்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ காவலரண்கள் இரண்டின் அருகே வீதி தடை போடப்பட்டு மக்கள் அவ்வீதியால் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது.
இதன்போது அந்த இராணுவக் காவலரண் இரண்டும் அமைந்துள்ள பகுதிக்குள் வைத்து எனது கணவன் பேரின்பராஜா (வயது 34) மற்றும் அவருடன் சென்ற உதயகுமார் ஆகிய இருவரையும் 57 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் மோட்டர் சைக்கிளில் இருந்து இறக்கி வெள்ளை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இதன்போது அவ்விடத்திற்கு அருகில் இருந்த எனது சகோதரி ,வீட்டில் இருந்த நான் கணவனை கடத்தும் போது என் கண்ணால் கண்டேன்.
அந்த இராணுவத்தை இப்பொழுதும் என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் கணவன் நின்ற இடத்திற்கு செல்ல முற்பட்ட போது காவலரணில் இருந்த இராணுவம் என்னை செல்லவிடவில்லை.
ஒரு காவலரணில் ஜெயவர்த்தன என்ற இராணுவ வீரர் இருந்தார். அவருக்கும் கடத்திய இராணுவத்தினரை தெரியும்.
அதன்பின் நான் இராணுவத்திடம் கேட்ட போது தாம் கடத்தவில்லை எனக் கூறிவிட்டார்கள். அதன்பின் பொலிஸ்நிலையம், மனித உரிமை ஆணைக்குழு, இராணுவ முகாம் என எனது மூன்று பெண் பிள்ளைகளுடனும் ஏறி இறங்கி வருகிறேன் என்றார்.
கடத்திய வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் கண்டேன்
இங்கு சாட்சியமளித்த கணேசு சதாசிவத்தின் மனைவி: தனது கணவரை கடத்திய 50- 7062 இலக்க வாகனத்தை கொஹூவல பொலிஸ் நிலையத்தில் கண்டதாகக் கூறினார்.
நான் எனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் களுபோவில பகுதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தோம்.
2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அப்போது எனது தம்பி கதவைத் திறந்தார். வீட்டிற்குள் நுழைந்த 5, 6 பேர் எனது கணவரை கூப்பிட்டார்கள். நான் நீங்கள் யார் என கேட்டேன். தாம் பொலிஸ் என கூறி எனது கணவரின் அடையாள அட்டை, பொலிஸ் வதிவிடச் சான்றிதழ் என்பவற்றை பார்த்துவிட்டு எனது கணவரை பிடித்து இழுத்துச் சென்றனர்.
நாங்கள் விடும்படி கதறினோம். எம்மை வீட்டுக்குள் விட்டு பூட்டிவிட்டு கணவனை இழுத்துச் சென்றார்கள். அதன்பின் எனது கணவனை 50- 7062 இலக்க வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதைக் கண்டோம். நாம் வெள்ளவத்தையில் இருந்த எனது அப்பாவை வரவழைத்து கதவைத்திறந்து பொலிஸ் நிலையம் சென்று விசாரித்தோம். அவர்கள் கணவரை பிடிக்கவில்லை எனக்கூறினார்கள். அதன் பின் எனது கணவரை கொண்டு சென்ற வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் கண்டேன். அதைச் சென்று பார்த்த போது அதற்குள் வேறுபலர் இருந்தார்கள். அதற்குள் கணவனை காணவில்லை. எப்படியாவது எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள் என அழுது அவர் கோரிக்கை விடுத்தார்.