பிரஸல்ஸ் தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் மத்திய பிரஸல்ஸ் சதுக்கத்தை ஆக்கிரமித்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பெல்ஜியம் பொலிஸார் தண்ணீர் பீச்சியடித்தனர்.
கடந்த ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் அங்கிருந்த முஸ்லிம் பெண் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டதோடு நாஜிக்கள் பாணியில் வணக்கம் செலுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
பிரஸல்ஸ் விமானநிலையம் மற்றம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பில் பெல்ஜியம் பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கறுப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் முகமூடிகளுடனும் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஐ.எஸ். குழுவுக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தி வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டு நாஜி கோஷங்களை எழுப்பி இருப்பதோடு அஞ்சலி செலுத்தும் பகுதியில் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டிருப்பதோடு இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.