சர்வேதச மன்னிப்பு சபையான அம்னாஸ்டியின் கடும் எதிர்ப்புகளை மீறி 3 தமிழர்களின் மரண தண்டனையை மலேசிய அரசு இன்று அதிகாலை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியாவில் வசித்து வந்த குணசேகர் பிச்சைமுத்து(35), ரமேஷ் ஜெயகுமார்(34) மற்றும் அவருடைய சகோதரரான சசிவர்ணம் ஜெயகுமார்(37) ஆகிய மூவரும் கடந்த 2005ம் ஆண்டு அங்குள்ள ஒரு விளையாட்டு திடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, இவர்கள் மூவருக்கும் விளையாட்டு திடலில் இருந்த ஒரு கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த மூன்று தமிழர்களும் கும்பலில் இருந்த ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, ‘எங்களுடைய தற்காப்பிற்காக தான் அவரை கொன்றதாக’ வாக்குமூலம் அளித்தனர். ஆனால், மூவரின் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மூவருக்கும் மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மூன்று தினங்களுக்கு முன்னதாக, குணசேகரின் தாயாருக்கு சிறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், அவருடைய மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதால் அவரை அடக்கம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தனர்.
இந்த மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை கண்டனங்களை வெளியிட்டு மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், பல்வேறு எதிர்ப்புகளை மீறி மலேசிய அரசு இன்று மூவரின் மரண தண்டனையும் நிறைவேற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மூவரின் வழக்கறிஞரான பாலையா ரெங்கையா பேசியபோது, ‘இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
மேலும், மூவரையும் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
மரண தண்டனை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் அடிப்படையில், மலேசிய சிறைத்துறையில் தற்போது வரை சுமார் 1,000 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.