டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 6 தீவிரவாதிகளுடன் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் முன்னாள் இராணுவ வீரரின் பெயர் முஹமத் குர்தி ஷாலன் என்ற ஜஹாங்கீர் என்று தெரியவந்தது. இவர் 6 தீவிரவாதிகளுடன் கடந்த மாதம் 26ஆம் திகதி பதன்கொட் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.
டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள், மருத்துவமனைகளில் தாக்குதல்களை நிகழ்த்துவது இவர்களின் திட்டம்.
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் தாக்குதல்களை அரங்கேற்றி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது தீவிரவாதிகளின் குறிக்கோள். இதனை உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஹோலி கொண்டாட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையால் பஞ்சாப், டில்லி, அஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.