பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயேசுவின் மரணம்தான் சர்வ உலக ஜனத்தின் நினைவிலும் வரும். அந்த நாளுக்கு பெரியவர்கள் அல்லது முன்னோர்கள் சரியாக பெயரிட்டுள்ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்ளிகளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர். ஆனால், அந்த பெயர்களின் அடிப்படையில் அந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு கெட்ட மனிதனுடைய மரணமாயிருந்தாலும் அதற்கு அனுதாபப்படுகிற உலகமே நாம் வாழும் இவ்வுலகம். ஒரு மனிதனுக்கும் தீங்கு நினையாமல் எல்லா மனித வாழ்விலும் நன்மை செய்த தேவகுமாரன் இயேசுவின் மரண நாளுக்கு வைக்கவேண்டிய பெயரை வைக்காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெயரிட்டார்கள்?
ஆம் பிரியமானவர்களே, இந்த நாள் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கு தேவகுமாரனாம் இயேசு சர்வத்தையும் படைத்தவர், சர்வத்தையும் ஆளுகை செய்ய வேண்டியவர். பிள்ளைகள் மாமிசத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் நம்மைப்போல் மாமிசத்தையும் இரத்தத்தையும் உடையவராகி; மரணத்தின் அதிபதியாகிய பிசாசானவனை தம்முடைய மரணத்தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்திலிருந்து விடுவிக்கும்படிக்கும்; மரணத்துக்கேதுவான ஒன்றும் அவரிடம் காணப்படாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்தையோ அடிமைத்தனத்தையோ கொடுக்கக்கூடாது என்று காண்பிக்கும் படிக்கும் மரணத்தை ஏற்றுக் கொண்டார்.
பிரியமானவர்களே, இந்த உலகில் வாழும் எல்லா மனிதனுக்கும் மரணம் என்பது மாமிசத்துக்கும் இரத்தத்துக்கும்தான். நம்முடைய ஆவி, ஆத்துமாவுக்கல்ல. சரீரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செயலற்றுப் போவதுதான் மரணம். எனவே பரிசுத்த வேதாகமம், ‘ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்’ (மத் 10:28) என்று சொல்கிறது.
மேலே சொல்லப்பட்டதுபோல மரண பயத்தினால் பிசாசானவன் யாவரையும் அடிமைப்படுத்தியிருந்தான். நம் இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ‘இவ்வுலகில் மரணம் என்பது வெறும் சரீரத்திற்கே சொந்தமானது’ என்ற உண்மையை தெளிவு படுத்தினார். எனவே உலகத்திலுள்ள எந்த மனுஷனும் மனுஷியும் இயேசுவின் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்திற்கு நீங்கலாகி பிசாசின் அடிமைத்தனத்திற்கு நீக்கலாக்கப்படுகிறார்கள். ஆகவேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்கிறது.
அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்லுகிறோம்? தேவன் மனிதனை தம்மைப்போல் வாழும்படியாயும், பரிசுத்த சந்ததியை உருவாக்கும்படியாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்படியாமை, மீறுதலினால் உலகத்தில் பாவம் வந்தது. எல்லா மனிதர்களையும் பாவம் ஆளுகை செய்தது. ஒரு மனித வாழ்விலும் புனிதம் (பரிசுத்தம்) இல்லை. பாவம் கழுவப்படவில்லை. ‘இரத்தம் சிந்துதலினால் மாத்திரமே பாவப்பிராயச்சித்தம் உண்டு’ என்பது உலகில் வாழும் அநேகமானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவனுடைய ஆதி விருப்பத்தின்படி இயேசு சிலுவையில் சிந்திய இரத்தம் மாத்திரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரிசுத்தமாக்கியது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்கப்படும் இயேசுவின் கீழ்படிதல், தாழ்மையின் மூலம் உலகில் கிருபையும், சத்தியமும் வந்தது. யார் இயேசு மூலம் வந்த கிருபையைக் கொண்டு சத்தியத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் வாழ்வில் கீழ்படிவும், தாழ்மையும் காணப்படும். இயேசுவின் கீழ்படிவும் தாழ்மையும் முழுமையாய் கல்வாரி சிலுவையில் காட்டப்படுகிறது. இயேசு அங்கே சிந்திய இரத்தத்தினால்தான் நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம். ஆகவேதான் புனித (பரிசுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்றப்படுகிறது.
பிரியமானவர்களே, எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் இருக்க இந்நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடிமைத்தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாபமாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்வாதத்தை உண்டாக்கி, மனிதனை சிந்தனை செய்ய வைத்த நாள். இது துக்கத்தின் நாளும் அல்ல, சந்தோஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்பணிப்பின், தீர்மானத்தின் நாள். இயேசுவின் மரணத்தில் நம்மை பங்குள்ளவர்களாக்கும் நாள். நம்முடைய பாவ, சாப, தரித்திர, மரண வல்லமையை முறியடித்த நாள். நாம் நம் இயேசுவின் மரணத்தை ஏற்று அதில் நாம் பங்குடையவர்களாகிறோம் என்பதுதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்மானங்களில் மிகவும் பெறுமதியான, விலைமதிக்க முடியாத தீர்மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும்.
ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்.
சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்!