வடமாகாணத்தில் உள்ள தமிழர் நிலங்களில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினரின் முகாம் விஸ்தரிப்பு மற்றும் படையினருக்கான குடியிருப்புக்கள் அமைக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கு வலியுறுத்த வேண்டும் என வட மாகாணசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பையையும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரி வித்தனர்.
இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
அனைவரும் தம் ஆசனங்களில் இருந்து எழுந்து அவை தலைவருக்கு முன்பாக வந்து தங்களின் கடுமையான எதிர்ப்பினை
வெளிட்டனர். வடமாகாணசபையின் 48 ஆம் அமர்வு நேற்றைய தினம் கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்பாதே மேற்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதியை கோரும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அமர்வின் தொடக்கத்தில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண அமைச்சுக்களால் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை மத்திய அரசாங்கம் கருத்தில் எடுக்காமல்,அதிகாரிகள் மட்டத்தில் உள்ளவர்களின் கருத்துக்களை உள்வாங்கி செயற்படுவதை நிறுத்தவேண்டும். எனக்கோரும் சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையை சபையில் முன்வைத்திருந்தார்.
சர்வேஸ்வரன்
இதனை தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில அமைச்சுக்கள் மட்டுமல்ல. மத்திய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்களும் தான்தோன்றித் தனமாகவே செயற்படுகின்றன. நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரி அரசாங்கத்தினால் மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. படையினருக்கான குடியிருப்புக்கள்
அமைக்கப்படுகின்றன. பௌத்த மயமாக் கல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேற்படி படையினருக்கான குடியிருப்பு வவுனியாவில் திறக்கப்படவுள்ளது. இச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். படையினருக்கு அமைக்கப்பட்ட குடியிருப்பை காணி இல்லாத, வீடுகள் இல்லாத மக்களுக்கு வழங்க வேண்டும் குறித்த விடயத்திற்கு வடமாகாணசபை கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஆளுங் கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன் பேசுகையில், மீள் நல்லிணக்க படையினருக்கான குடியிருப்பு என்ற பெயரில் இந்த குடியிருப்பை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இது உடனடியாக நிறுத்த ப்படவேண்டும். என்பதுடன் இதற்கு மாகாணசபைக்கு உள்ளேயும், வெ ளிேயும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.
சிவாஜிலிங்கம்
தொடர்ந்து எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
படையினருக்கான குடியிருப்பு வவுனியா மாவட்டத்தில் மட்டுமல்ல. யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் 90 ஏக்கர் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான நிலம். இதில் அவ்வப்போது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அவை தவிர மீதமாகவுள்ள ஒரு பகுதி நிலத்தில் தங்கியிருந்த மக்களை அண்மையில் படையினர் பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்தார்கள். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே நின்றிருந்த படை அதிகாரி 2013ஆம் ஆண்டு படையினருக்கான குடியிருப்பு அமைப்பதற்காக அந்த நிலத்தை கையகப்படுத்த எடுக்கப்பட்ட நில அளவை படங்களை எங்களுக்கு காண்பித்தார்.
எனவே வவுனியா மாவட்டத்தில் மட்டுமல்ல. யாழ்ப்பாணத்திலும் படையினருக்கான குடியிருப்பு வருகின்றது என சுட்டிக்காட்டினார்.
ரவிகரன்
தொடர்ந்து து.ரவிகரன் சபையில் கருத்து தெரிவிக்கையில். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளி வாய்க்கால் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 671 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படவுள்ளது. கேப்பா பிலவு கிராமத்தில் மக்கள் தங்களுடைய காணிகளை மீள தங்களிடமே வழங்கக்கோரி இன்றைய தினம்(நேற்று) உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைக்கப்படுகின்றது. எனவே மக்களுடைய காணிகளை அரசாங்கம் களவாடுவதை நிறுத்தவேண்டும். மக்கள் தங்களுடைய காணிகளையே கேட் கிறார்கள். தவிர மற்றவர்களுடைய காணிகளை கேட்கவில்லை. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி கூட இந்த விடயத்தை பேசினார். எனவே மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்கவும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை நிறுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என குறிப்பிட்டார்.
தவராசா
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் ஒரு பாரதூரமான விடயம். எனவே இந்த விடயத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு தமிழ் கட்சிகள் வழங்கிக் கொண்டிருக்கும் ஆதரவை நிறுத்தவேண்டும் என வடமாகாணசபையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்து அதனை நிறைவேற்றினால் என்ன? என சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தற்போது எமக்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றில் இருந்து கசிந்த தகவல்கள் ஊடாக அறிய கூடியதாக உள்ள விடயம் என்னவென்றால் முள்ளிவாய்க்கால் காணி முழுவதையும் அவர்கள் சுவீகரிக்கப்போகின்றார்கள். எனவே இந்த விடயத்தில் முதலமைச்சர் கூடியளவு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கேப்பாபிலவு விடயத்தில் 2500 ஏக்கர் நிலம் மக்களுடைய நிலம். அதனை மீள மக்களிடம் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அங்கே விமான ஓடுதளம், படைமுகாம்கள் என அனைத்தும் அமைக்கப்பட்டுவிட்டன மேலும் மக்கள் உண்ணாவிரதம் இருப்பதும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும் தற்போது நகைச்சுவையாகிவிட்டன.
ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கும், அரசியல் லாபம் தேடுவதற்கும் மக்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கிட்டத்தட்ட கேப்பாபிலவிலும் மக்களுடைய காணியில் படையினருக்கான குடியிருப்பு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். என கூறினார்.
சத்தியலிங்கம்
தொடர்ந்து சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் பகுதியில் 14 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். பாவற்குளத்தில் 900 குடும்பங்கள் குடியேற்றப்பட்டார்கள். எனவே வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை நிறுத்தப்படவேண்டும். என அவர் குறிப்பிட்டார்.
சிவநேசன்
தொடர்ந்து எஸ்.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த காடழிப்பு தொடர்பாக நாங்கள் பல தடவைகள் பேசி அந்த காடழிப்பு நடவடிக்கையை நிறுத்தியிருந்தோம். இந்நிலையில் மேற்படி காடழிப்பு இடம்பெற்று நிறுத்தப்பட்ட சாமிதோட்டம் என்ற பகுதியில் இருந்து தற்போது படையினர் தங்களுடைய முகாம் அமைப்பதற்காக காடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது அவ்வாறான தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள். எனவே இவ்வாறான விடயங்கள் எப்போது நிறுத்தப்படும் என அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர்
தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான விடயங்களை நாங்கள் நிச்சயமாக எதிர்ப்போம். இந்த விடயத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் நான் உடன்படுகின்றேன். என தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி கருத்துக்களை உள்வாங்கி படையினருக்கான குடியிருப் புக்கள் அமைத்தல், பௌத்த மயமாக்கல், மற்றும் சிங்கள குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கள் ஆகியவற்றை நிறுத்துமாறு முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதியை கோருவதென தீர்மானிக்கப்பட்டது.