கடந்த காலப்போரின் போது ஆயுத முனைகளில் தமிழரை வெல்லமுடியவில்லை என்பதால், அரசுகள் பொருளாதாரப் போரினைக் கட்டவிழ்த்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி சேவைச்சந்தை கட்டட அடிக்கல் நாட்டு வைபவம், நேற்றுகரைச்சி பிரதேச சபை செயலாளர் ஹம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நல்ல எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் ஆரம்பிக்கப்படுகின்ற விடயங்கள் வெற்றி பெறும், வளர்ச்சிபெறும் என்பதற்கு இது நல்ல உதாரணம். கிளிநொச்சி மாவட்டம் தனி மாவட்டம் என்பதற்கு அப்பால் ஒரு மைய பிரதேசமாக இருக்கின்ற காரணத்தால் எங்களுடைய சந்தை வித்தியாசமான வளர்ச்சியைக் காட்டவேண்டும்.
ஒரு காலத்திலே சனிக்கிழமை, புதன்கிழமைகளில் கிளிநொச்சி சந்தை களைகட்டியிருந்ததை எண்ணிப்பார்க்கிறோம். ஆனால் இப்பொழுது அவ்வாறான நாட் சந்தையை நாங்கள் காண முடிவதில்லை. ஆகவே உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளரிடம், கிழமையில் ஒரு நாளாவது சந்தை நாளாக அறிவிக்கவேண்டும் என வேண்டுகொள் விடுக்கிறேன்.
கடந்த காலப் போரின் போது ஆயுத முனைகளில் தமிழரை வெல்லமுடியவில்லை என்பதால் அரசுகள் மக்கள் மீதான பொருளாதாரப் போரினை கட்டவிழ்த்து பொருளாதார ரீதியில் நலிவுற்ற சமூகமாக தமிழர்கள் திகழவேண்டும் என எண்ணினர். ஆனால் அவர்களின் கனவுகளை தகர்த்தெறிந்து எமது பொருளாதார வளங்களைக் கொண்டு சிறப்பான வாழ்வியலை தமிழர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அதே ஆர்வத்தோடு, சவால்கள் நிறைந்த வியாபார போட்டியில் எம்மக்களின் முன்னேற்றத்திற்கு இச்சந்தைக் கட்டிடம் வழி வகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.