நாள்: 23.03.2016
தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வோம்…!
“எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனம் கண்டுகொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள் எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்”
– தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து!
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே !
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பிரான்சு நாட்டில் தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து அம்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒரு நெருக்கடியான சூழலுக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.
சிறீலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையைத் தொடர்ந்து தாயகத்தில் மட்டுமன்றி, புலம் பெயர்தேசத்திலும் தமிழினவழிப்பிற்கான செயற்திட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் சிங்களத்தால், தமிழீழத் தேசியக் கட்டமைப்புகள் மீது குறிவைத்து, போலித் தேசிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படுகின்றன. தமிழீழத் தேசியத் தலைவரினால் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களையும், தேசியப் பணிகளில் இருந்து விலக்கிவைக்கப்பட்டவர்களையும், இறுதிப் போரில் எதிரியிடம் சரணடைந்து இரண்டகம் புரிபவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களையும் பயன்படுத்தி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் நோக்கில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருகின்றது. அதற்காகவே, போராளிகள், பொதுமக்கள், மாவீரர் குடும்பம் என்ற சொற்பதங்களின் ஊடாக விடுதலைக்காகப் போராடும் மக்களின் உணர்வினையும் தனது தமிழினவழிப்பிற்காகப் பயன்படுத்த எண்ணுகிறது. இவை தொடர்பான உண்மையை 20.01.2016 அன்று “”சர்வதேச அரங்கில் உயிர்ப்புடன் இருக்கும் தமிழீழச் சித்தாந்தத்தை அழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முழு அளவில் முன்னெடுக்கப்போகிறோம்” என்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட திட்டமிடப்பட்ட தமிழினவழிப்பு நடவடிக்கைகளின் வரிசையிலேயே முதலில் மாவீரர் நாள் நிகழ்வுகளும் பிரிவு பிரிவாக நடாத்தப்பட்டன. எதிரியின் செயற்திட்டங்களிற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இணங்கமறுத்ததை அடுத்து அதன் பொறுப்பாளராக விளங்கிய கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். “எல்லாளன் படை” என்ற பெயரில் ஈழமுரசு ஊடகம் மீதும், செயற்பாட்டாளர்கள் மீதும் கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர் மேலான கொலை முயற்சியுடன் மேலும் பல செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டிருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப் பாளராக இருந்த திரு. பரமலிங்கம் அவர்கள் மீதும் இருதடவை கொலைமுயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன.
தமிழீழத் தாயகத்தில் தமிழ் இளைஞர்களை குறிவைத்து கலாச்சார சீர்கேடுகளையும் போதைமருந்துப் பாவனையையும் சிங்களப் படையினர் ஊக்குவித்து வருகின்றனர். அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்களை மையமாகக்கொண்டும் தாக்குதலை நடாத்த தொடங்கியுள்ளது. எம்சந்ததியினரின் அறிவுசார், உடல்நலம், உளம்சார் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் திட்டங்களையும் முன்னெடுக்கிறது.
இந்நிலையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் இளையோரின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் தமிழர் உதைப்பந்தாட்டச் சம்மேளனக் கட்டமைப்பின் செயற்பாடுகளிற்கு இடையூறு ஏற் படுத்தும் வகையில் 20.03.2016 அன்று சம்மேளனத்தின் தலைவர் திரு.நந்தகுமார் அவர்கள் கூரிய ஆயுதம் கொண்டு கொலை முயற்சித் தாக்குதலுக்கு உள்ளாக்கி படுகாயத்திற்குள்ளாக்கப்பட்டுள் ளார். ஆண்டுதோறும் நடைபெறும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டியின் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வு ஆரம்பிக்க இருந்த வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். தொடர்ந்து மைதானத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரும், வீதியில் வைத்து செயற்பாட்டாளர்களும் தாக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் முயற்சிகள் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்போடு கைகூடிவரும் வேளையில், பிரான்சில் இடம்பெற்றுவரும் பயங்கரவாத கொலைக் குற்றச் செயல்கள், மேலும் எம்மைப் பயங்கரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
காலத்திற்கு காலம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது பல இடர்களையும், சோதனைகளையும் சந்தித்து வருகின்றபோதிலும் தமிழீழ விடுதலையையே குறிக்கோளாகக் கொண்ட மக்களாகிய உங்களது உறுதியும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஆதரவினால் தான் எமது செயற்பாடுகளை பிரான்சு நாட்டின் சட்ட விதிகளுக்கமைய முன்னெடுத்து வருகின்றோம்.
விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்ற தமிழீழத்தேசியத் தலைவரின் சிந்தனையை நினைவிலிருத்தி, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கி, எமது மாவீரர்களின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என உறுதிபூணுவோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு