யேர்மன் வெளிவிவகார அமைச்சின் சிறிலங்காவுக்கு பொறுப்பான முதன்மை அதிகாரியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சென்ற வெள்ளிக்கிழமை அன்று முக்கிய சந்திப்பு ஒன்றை யேர்மன் தலைநகர் பேர்லினில் நடாத்தியுள்ளார். ஒரு மணித்தியால நேரத்தை கொண்ட இச் சந்திப்பில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்டம் என்பதை முதன்மைப்படுத்தி திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமது உரையாடலில் வலியுறுத்தியுள்ளார் .பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்டம் விடையங்கள் தொடர்பில் மஹிந்த அரசாங்கத்தைப் போன்று மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் அசமந்தமாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பான விசாரணையில் எவ்வித சர்வதேச ஈடுபாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பது அவர்களின் நிலைப்பாட்டை இன்றும் மிக தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு மைத்திரி ரணில் அரசு நல்லாட்சி அரசாங்கம் என்று வேடமிட்டு, உலகை ஏமாற்றும் சமநேரத்தில் இன்றும் தாயகத்தில் தமிழ் மக்கள் கட்டமைப்புசார் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதையும் மேலும் தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது .யேர்மன் அரசாங்கம் சிறிலங்காவோடு எவ்விதமான வர்த்தக பொருளாதார உறவை வைத்திருந்தாலும் , அவைகள் அனைத்தும் நிபந்தனைகளுடனே முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அத்தோடு பொறுப்புக்கூறல் விடையத்தில் தாம் மிக அவதானமாக அனைத்தையும் தெளிவாக கண்காணிக்கின்றனர் எனவும் வெளிவிவகார அமைச்சின் சிறிலங்காவுக்கு பொறுப்பான முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தனது யேர்மன் நாட்டு பயணத்தையொட்டி ஏனைய மனிதவுரிமை அமைப்புகளையும், தமிழ் மக்களையும் சந்தித்து தாயக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் உரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.