மீன் பிடிப்பதற்காக பள்ளிக்குடா, பாலைதீவு ஆகிய கடற்பரப்பில் போடப்பட்டிருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான களங்கண்ணி வலைகள் உட்பட கடற்கலன்களை எதுவித முன்னறிவித்தலுமின்றி கடற்படையினரின் பாதுகாப்புடன் சென்ற கடற்றொழிற்றிணைக்கள அதிகாரிகள் வெட்டிச் சேதப்படுத்தியதுடன் ஒரு தொகுதி வலைகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
தங்க நகைகளை அடகு வைத்து கடன்பட்டு தொழிலில் ஈடுபட்ட காவல்காட்டு, காக்கைதீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் அதிகாரிகளின் அடாவடித்தனம் குறித்து யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவரின் ஊடாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
யாழ். மாவட்டம் வலி. தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த காவல்காட்டு, காக்கைதீவு ஆகிய இடங்களில் வசிக்கும் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடா பாலைதீவு ஆகிய கடற்பரப்பில் களங்கண்ணித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுமார் 25 அடி நீளமான இரும்புக் பைப்புகளின் உதவியுடன் ஆழ் கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் களங்கண்ணித் தொழிலில் ஈடுபடும் மீனவர் இரு தினங்களுக்கு ஒரு தடவை கடலுக்குச் சென்று வலையில் அகப்பட்டுள்ள மீன்களை எடுத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கடற்படையினரின் உதவியுடன் மேற்படி கடற்பரப்பிற்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிப்பதற்காகக் கடலில் போடப்பட்டிருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான களங்கண்ணி வலைகளையும் கடற்கலங்களையும் சேதப்படுத்தியதுமல்லாமல் பல மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வலைகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.