விடுதலைப்புலிகளின் டொலர்கள், தங்கம் என்பன தம்மிடம் உண்டெனவும் அவற்றை குறைந்த விலையில் தருவதாக வும் கூறி வங்கி முகாமையாளர் ஒருவரை ஏமாற்றி ஆறு இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குழுவினை திருகோணமலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பணமோசடி கொள்ளையில் நீண்ட காலமாக ஈடுபட்டுவந்த குழு ஒன்று தோப்பூரைச் சேர்ந்த வங்கியொன்றின் முகாமையாள ரைத் தொடர்புகொண்டு விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான டொலர்கள் எம்மிடம் உள்ளன. இதை குறைந்த
விலைக்கு உங்களுக்கு தருகிறோம். ஆறு இலட்சம் ரூபா பணத்துடன் வாருங்கள் என்று கூறி ஹோட்டல் ஒன்றின் முகவரியையும் கொடுத்துள்ளனர்.
குறித்த முகாமையாளரும் ஆறு இலட்சம் ரூபா பணத்துடன் ஹோட்டலுக்கு வந்தபோது அவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரிடம் இருந்த ஆறு இலட்சம் ரூபாவையும் கொள்ளையடித்ததுக்கொண்டு கொள்ளை கோஷ்டியினர் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான முறைப்பாடு பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து திருகோணமலை தலைமைப் பொலிஸ் அதிகாரி மகேஸ் குமாரசிங்க மேற்படி கொள்ளையர்களை அவர்கள் வந்த காருடன் மடக்கிப்பிடித்துள்ளார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்த வட்டகொடை எனும் இடத்தைச் சேர்ந்த கதிரவேல் ராஜகோபால், முத்துக்குமார் சிவானந்தராஜா, ரம்பொடையைச் சேர்ந்த செல்லத்துரை சுப்ரமணியம், பிட்டமாறுவையைச் சேர்ந்த வீரப்பன் ரவிக்குமார், திருகோணமலை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த முத்துராஜா சுதாகரன், விஸ்ணு ஜெயகாந்த், நிலாவளி இறக்கக்கண்டியைச் சேர்ந்த ராசீக் முகமட் ஹஸன் ஆகிய ஏழு பேரையும் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் ரி.சரவணராஜா மேற்படி ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.