பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர் சிங்களக் கைக்கூலிகள்.
இன்று பிரான்சில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரான்ஸ் தமிழீழ விளையாட்டுத்துறைச் சம்மேளன தலைவர் மீதும், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தொிவிக்கின்றனர்.
இதேவேளை பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரும், விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். விளையாட்டு மைதானத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பிரான்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் உள்ள விளையாட்டுக் கழகங்களில், 21 கழகங்கள் இச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றியுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தும் கேவலமான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மக்கள் முன் அடையாளப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
மண் விடுதலைக்காக வீழ்ந்துபட்ட மாவீரர்களின் பெயரால் நடாத்தப்படும் போட்டிகளை, நிறுத்த முற்படுவோர் நிச்சயமாக தேசத்தை நேசிப்பவர்களாக இருக்க முடியாது. இவர்களின் பின்னால் எமது தேசிய விடுதலை இலக்கைச் சிதைப்பவர்களே உள்ளனர்.
இன்று காலை பிரான்ஸ் வியைளாட்டுத்துறைப் பொறுப்பாளர், இந்த வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு, முதலுதவிப்படையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பார்க்க வைத்தியசாலைக்குச் சென்ற தேசியச் செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலையின் முன்றலில் வைத்து, இதே கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மோசமாகத் தாக்கிய, இந்தக் கும்பலின் வன்முறையாளன் ஒருவர், சற்று முன்னதாகக் பிரான்ஸ் காவற்துறையினரால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புலம் பெயர்ந்த நாட்டில் தேசிய செயற்பாட்டாளர் மீது வன்முறை மேற்கொள்ளப்படுவது இது முதல் முறையல்ல.
பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஊடகவியலாளர் கப்டன் கஜன் ஆகியோர், 26.10.1996 இல் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, இந்த நாசகார சக்திகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்விதமே பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளராக இருந்த கேணல் பருதி மீது கூரிய ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து மீண்ட அவரை. இந்த தேசவிரோத வன்முறையாளர்கள், சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.
அவ்விதமே, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா மீது, அவரது இல்லத்திற்கு அண்மையில் வைத்து மோசமான வன்முறையுடன் கொலைவெறி தாக்குதல் இடம் பெற்று, அவர் அதிலிருந்து ஒருவாறு மீண்டுள்ளார்.
இதன் தொடரச்சியாக, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளராக இருந்த திரு பரமலிங்கம் மீது அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து இதே நாசகாரத் தேசவிரோத சக்திகளால் வன்முறையுடன் கூடிய, வெட்டுக்களும் கொலைமுயற்சியும் மேற்கொள்ளப்பட்டன. அதிலிருந்து ஒருவாறு உயிர் தப்பியவர் மீது, மீண்டும் அவரது வர்த்தகநிலையத்தில் வைத்து, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காக்கப்பட்ட காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இவ்விதமான அச்சுறுத்தல்கள் குறித்த தகவலை மக்கள் அறியாவண்ணம் இருப்பதற்காகவே ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடவியலாளர் ஆயுத முனையில் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார். அதன் வன்முறையாளன் பிரான்ஸ் காவல் துறையால் கைது செய்யப்பட்டு நீதித்துறையால் தண்டிக்கப்பட்டதும் தெரிந்ததே.
சிங்கள அரசு அண்மைக்காலமாக புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது குற்றம் சாட்டி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் நிலையில், இத் தாக்குதல்கள் அதன் எடுபிடிகளால் மேற்கொள்ளப்படுகின்றது என்பது நிதர்சனமாகின்றது.
இந்த தமிழின விரோதிகளின் அச்சுறுத்தலில் இருந்து மீள்வதற்குப், புலம்பெயர் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் முக்கிய கடமையாகும்.