யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 10 சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்க்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ். ஊர்க்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய விசாரணையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
வழக்கு விசாரணை எதிர்காலத்தில் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதால் அங்கு பிணையைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் சார்பில் வழக்கு தொடர்பான பிரதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கோரப்பட்டுள்ள மரபணு பரிசோதனை அறிக்கை இன்றும் மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை.
குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.