எமது உரிமைகளுக்காக எமது மக்கள் கொடுத்த விலை அதிகம், இந்த நிலையில் அரசாங்கம் தரும் தீர்வினை நாங்கள் ஏற்றுக்கொள்வது, அது எங்களது இளைஞர்களது தியாகங்களுக்கும் மக்களது உயிரிழப்புக்களுக்கும் செய்யும் துரோகமாகும், என தெரிவித்துள்ள யாழ்.பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்,
தமிழ் மக்களுடைய நியாயமான உரிமைகளை மக்களின் பங்களிப்புடன் பெறுவதற்கே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் எமக்கான தீர்வினை தருமாறு அரசினை வலியுறுத்தி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்ட முன் வரைபு தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கடந்த காலங்களில் எமது இளைஞர்கள் செய்த தியாகம், அவர்கள் விடிவுக்காக உழைக்க வேண்டிய கடமையையும் கட்டாயத்தையும் எமது மக்களிடத்தில் சுமத்தியுள்ளது. மக்களுடைய தியாகத்திற்கு அவர்களுக்கான நியாயமான நீதியான நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு விடிவை தீர்வாக சமர்ப்பிக்க வேண்டிய கடமை இந்த தேசத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட எந்த யாப்புக்கலுமே தமிழ் மக்கலுக்கான உரிமைகளை வழங்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் யாப்பிலே எத்தகையதான யாப்பு எமது மக்களுக்கு நீதியான நியாயமான தீர்வினை வழங்க முடியும் என்பதனை பொறுத்த வரையில் மாற்றுக்கருத்து இருக்க முடியாத ஒரு யாப்பு தான் சமஸ்டி யாப்பு. இதற்கு முன்னர் நாங்கள் பிரிந்து செல்வதனை விட சமஸ்டி அடிப்படையிலே வருகின்ற இந்த யாப்பு,
எல்லோரினையும் இணைத்து சம பங்காளிகளாக்குகின்ற ஒரு யாப்பு தான் இது, இந்த சமஸ்டி என்ற பதத்தை முதன் முதலில் பிரயோகித்தவர்கள் தமிழர்கள் அல்லர். சிங்கள மக்கள் தான் உபயோகித்தவர்கள் அதுவும், தனிச்சிங்களத்தை கொண்டுவந்த பண்டாரநாயக்க, கண்டிய இராசதானிகளும் தான் சமஸ்டி என்ற பதத்தை மிக பிரபல்யமான பதமாக சுதந்திரம் கிடைக்கும் வரையில் பயன்படுத்தி உள்ளார்கள்.
இவர்களுடைய கோரிக்கையிலே மத்திய கண்டிப்பகுதி ஒன்று கரையோரப்பகுதி ஒன்றும் வடக்கு கிழக்கு இணைந்தது தமிழர் தாயகம் என்று மூன்றினையும் முன்னிறுத்தி உள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அலகிலே பிராந்தியங்கள் வந்துள்ளன.
சம பங்காளிகளாக மக்கள் அனைவரும் இருக்கும் போது வெளிப்படையான ஊழல் அற்ற நிர்வாகம் அமையும் என்பதனை தெட்டத்தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு சிங்கள மக்களிடத்தில் உண்டு. அரசியல் வாதிகள் இநத்தகைய புரிதலை விரும்பவில்லை. இவற்றோடு கொழும்பை மையமாக வைத்து எடுக்கப்படுகின்ற முடிவுகளால் பிற இனங்கள் பாதிக்கப்படுகின்றன.
தங்களுடைய செல்வாக்கும் அதிகாரமும், அரசியல் இலாபமும் போய்விடும் என்பதே இந்த விரும்பாமைக்கு காரணம் ஆகும். சமஸ்டி அரசியல் திட்டத்திலே மத்திய மாகாண அரசுகளுக்கிடையில் உள்ள திட்டங்கள் சரியாக வரையப்பட்டு இருக்கும். அதனை ஒருவர் பறிக்கவோ நீக்க முடியாத நிலை ஏற்படும். தற்போது ஒரு நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நாங்கள் நல்ல ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பங்காளிகளாக, தேசிய அரசினை தீர்மானிக்கும் பங்காகளிகளாக மாற்றும் மாநிலத்திலே சுய ஆட்சி மத்தியிலே கூட்டாட்சி என்ற முறைமையை கொண்டுவருவது தான் சமஸ்டி, இதனை பெற்றுக்கொள்வதற்கு புத்தி ஜீவிகள் மட்டுமல்லாது, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்றார். பேராசிரியர் சிற்றம்பலம்.