தெஹிவளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

0
424

colkfpதெஹிவளை கௌடான வீதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவர்களின் உடலில் காயங்களோ வேறு தடயங்களோ இருக்கவில்லை என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹூஸைன் மௌலானா(64)அவரது மனைவி மிர்சிதா மௌலானா(52) அவர்களின் மகள் உஸ்னா மெளலானா (13) மற்றும் உறவுக்கார பெண்ணான மிஷ்னா மெளலானா (14)ஆகிய வர்களே இவ்வாறு பரிதாபமாக இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாயு கசிவு காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு வீட்டிற்குள் கரும் புகை படர்ந்ததற்காக அடையாளங்கள் அவதானிக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் நால்வரினதும் சடலங்கள் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டன. கல்கிஸ்ஸ நீதவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் நேரில் வந்து விசாரணை கள் மேற்கொண்ட பின்னர் நேற்று மாலை சடலங்கள் பரிசோதணைக்காக களுபோவில ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நால்ரிவனதும் உடல் பாக மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

வர்த்தகரும் சமூக சேவையாளருமான மிலேனியம் கல்வி நிலைய ஹுஸைன் மெளலானா வெலிகம பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவராவார். சம்பவதினம் இரவு இவரும் இவரது மனைவியும் மகளும் வீட்டில் இருந்துள்ளனர். மின்வெட்டு அமுலில் இருந்ததால் வீட்டில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு குளிரூட்டியும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

மகளின் வகுப்பில் கற்கும் மிஷ்னா மெளலானா அவர்களின் வீட்டிற்கு அன்று வந்துள்ளதோடு முன்வீட்டு உறவுக்காரச் சிறுவன் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்து விளையாடிவிட்டு இரவு உணவும் சாப்பிட்டு விட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உறவுக்கார பெண்ணின் தந்தை சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளதாகவும் அறிய வருகிறது. அவரை அழைத்துச் செல்வதற்காக இரவு 10.30 மணியளவில் அவரின் தாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தான் அங்கு தங்கிவிட்டு வருவதாக குறித்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலை (நேற்று) சர்வதேச பாடசாலையில் 9 ஆம் வகுப்பு கற்கும் மாணவிகள் இருவரையும் அழைத்துச் செல்வதற்காக காலை 7.30 மணியளவில் பாடசாலை வேன் வந்துள்ளது. வாகன ஒலி எழுப்பிய போதும் யாரும் வராததால் பாடசாலை வாகனம் திரும்பிச் சென்றுள்ளதாக அறிய வருகிறது.

இதன் பின்னர் காலை 9.30 மணியளவில் ஹுஸைன் மெளலானவின் சாரதி வீட்டுக்கு வந்துள்ளதோடு வீட்டு மதில் கதவை தட்டியும் யாரும் வராததால் தொலைபேசியில் அழைத்தும் பார்த்துள்ளார். எந்த சத்தமும் இல்லததால் சந்தேகம் வரவே அயலிலுள்ள உறவினர்களின் உதவியுடன் வீட்டு மதில் கதவையும் வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அந்த சமயம் வீட்டில் கரும்புகை படர்ந்திருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

வீட்டின் முன் அறையில் கதிரையில் சாய்ந்த நிலையில் வர்த்தகர் சடலமாக சாய்ந்து கிடந்துள்ளதோடு அவருக்கருகில் மகளும் உறவுக்கார பெண்ணும் விழுந்து கிடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவரின் மனைவி உள்அறையில் கட்டிலில் விழுந்து கிடந்துள்ளார். இவர்களை தட்டி எழுப்ப முயன்ற போது இறந்திருப்பது தெரிய வந்துள்ளதோடு இவர்களை தொட்ட போது கையில் கரும் புகை படிந்ததாக உறவுக்கார பெண் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தெஹிவளை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு. டி.பி. சிறிசாந்த தெரிவிக்கையில்,

இறந்த நபரின் மைத்துனர் ஒருவர் பொலிஸாருக்கு காலை 10.00 மணிக்கு தொலைபேசியில் அறிவித்தார். அதன்படி காலை 10.20 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள். அந்த சமயம் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் ஒரே கரும்புகையாக இருந்தது. நால்வரும் இறந்து கிடந்தனர். நிலத்தில் கறுப்பு நிற தூசி படிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மரணத்திற்கான தெளிவான காரணம் தெரியவில்லை.

ஆனால் சமையலறை அலுமாரியும் (Pantry cubboard) அதில் இருந்த இலத்திரன் அவன்னும் எரிந்த நிலையில் காணப்பட்டன என்றார்.

இது கொலையா? தற்கொலையா? விபத்தா ? என உறுதியாக கண்டு பிடிக்கப்படாத போதும் மின் கசிவினால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. கீழ்மாடியிலிருந்து வெடிச்சத்தமோ, கூச்சலிடும் சத்தமோ, மேல்மாடியிலிருந்தவர்களுக்கு கேட்கவில்லையென அறியவருகிறது.

நேற்று இப்பகுதியில்மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டிருந்ததோடு இரவு மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருந்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கல்கிஸ்ஸ நீதவான் பிரபாசா ரணசிங்க சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் சட்ட மருத்துவ அதிகாரி, பகுப்பாய்வு அதிகாரி ஆகியோரும் நேரில் வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். சடலங்களில் உடல் மாதிரிகள் பரிசோதனைக்காக பெறப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் களுபோவில ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர் சம்பவம் நடைபெற்ற வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று(17) நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்த வர்த்தகர் மிலேனியம் கல்வி நிலைய பணிப்பாளராக கல்வி, சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களித்து வந்துள்ளதோடு சமூக நல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளவரென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here