குறைந்தபட்ச ஆண்டு வருமானமாக 35,000 பவுண்ட்ஸினைக் கொண்டிராதவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற பிரிட்டன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால், அங்குள்ள வெளிநாட்டவர்கள் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் சென்று குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய நாட்டினர், குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பிரிட்டனில் வசிப்பவர்கள் 35,000 பவுண்ட்ஸினை ஆண்டு வருமானமாக கொண்டிருக்காத பட்சத்தில், இந்த நடைமுறையின் அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமம் வழங்காமல் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதனால், பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரதும் வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.