பாரீஸ் பள்ளியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டிய மனநலமில்லாத நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தெற்கு பாரீஸில் உள்ள Enghien-les-Bains என்ற பகுதியில் உள்ள ஒரு ஆன்மீக பள்ளியில் தற்கொலை படையினர் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பள்ளியை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி தாக்குதலுக்கு தயார் ஆனார்கள்.
ஆனால், வெளியான தகவலில் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வரும் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தான் இந்த மிரட்டலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
பொலிசார் அவரை மடக்கி கைது செய்ய முயற்சித்த போது, தன்னிடமுள்ள வெடிகுண்டை வெடிக்க வைப்பேன் என மிரட்டியுள்ளார். ஆனால், அவரிடம் ஒரு கை துப்பாக்கி மட்டுமே இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
சில நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு, மனநலம் குன்றிய நபரை சுற்றி வளைத்த பொலிசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.