ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 31 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் உள்ளதாக சமீபத்திய தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை பிடித்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் ஐ. எஸ் தீவிரவாதிகளின் நடைமுறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து 6 மாதங்களாக ஆய்வு செய்து குவில்லியம் அறக்கட்டளை ஒன்று 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஈராக்கின் மொசுல் நகரில் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை கடத்தி வந்து ஒரு கட்டிடத்தின் ஹாலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அலறியதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பி வந்த பெண் ஒருவர், ஐஎஸ் தீவிரவாதிகள் தன்னை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து தினமும் மூன்று முறை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்களில் 31 ஆயிரம் பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.
அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே தீவிரவாத பயிற்சி அளித்து ஒரு ராணுவத்தையே உருவாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகள் தற்போதே சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
பின்னர் அவர்களை உளவு வேலைக்கும், வீரர்களாகவும், தற்கொலைப்படையாகவும், கொலைக்காரர்களாகவும் மாற்றுகின்றனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு வயதிலிருந்தே பயிற்சி பெற்று வருவதால் அடுத்த தலைமுறை தீவிரவாதிகள் மிகவும் மூர்க்கமாக இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.