தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாலே போர் ஏற்பட்டது:நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச!

0
204
wijayadasa-rajapaksa1972 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழ்த் தரப்பினர் புறக்கணிக்கப்பட்டதன்  காரணமாகவே தனிநாட்டுக்கான வட்டுக்கோட்டை பிரகடனமும், போரும்  ஏற்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச  தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான மூன்றாம் வாசிப்புமீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர்  மேலும்  தெரிவிக்கையில்,
1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பல்லின மற்றும் பல மதத்தினர் வாழும் நாட்டுக்கு இவை உகந்ததல்ல என்ற எதிர்ப்புக்களும் இருந்தன. உலகில் எந்தவொரு நாட்டிலும் மக்களுக்கு தேவைகளை எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றும் விதத்திலான அரசியலமைப்புக்கள் ஏற்படுத்தப்படவில்லை.
எந்தவொரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு கீழ் ஆளப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மக்கள் தயாராகவுள்ளனர். அதேவேளை அந்த சட்டங்களுக்கு நாட்டு மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் கட்டுப்பட வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகும்.அதற்கமையவே நாட்டின் அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். எமது நாட்டு அரசியலமைப்பு அரசியல் அதிகாரத்தையா? மக்களயா? நாட்டையா? பாதுகாக்கின்றது என்பது கண்டறியப்பட வேண்டும்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறைபாடுகள் உள்ளன. எனவே தான் அதனை உருவாக்­கிய ஐ.தே.கட்சியே அது மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தது. அதேபோன்று 1972 இல் குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது அதில் தமிழ் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. இதன் காரணமாகவே தனி நாட்டுக்கான வட்டுக்கோட்டை பிரகடனம் மற்றும் 30 வருடகால போர் தலை தூக்கியது.
1978 ஜே.ஆரின் அரசியலமைப்பு நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்தி நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்தது. கடந்த காலங்களில் இதன் பெறுபேறுகளை நாம் கண்டோம். எனவே தான் ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு என்ற முத்திரை குத்தப்படாத இலங்கையின் அரசியலமைப்பு என அனைவரும் பெருமையுடன் மார்தட்டும் விதத்தில் அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கின்றோம்.
இது தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் திருத்தங்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். பல்லின பல மதங்களை சேர்ந்தவர்களின் நாடு என்ற ரீதியில் அனைவரது கருத்துக்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன என அவர்  மேலும்  தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here