முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பஸில் ராஜபக்ஸ உள்ளிட்டோர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க குணதிலக்க முன்னிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடி ரூபா செலவில் நிதியை ஒதுக்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸிவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் 50 இலட்சம் நிழற்படத்தை அச்சிட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இன்றைய வழக்கின் போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப்பிணையும் தலா 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இருவருக்கும் வெளிநாடு செல்வற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கும் அரச புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் கைவிரல் அடையாளங்களை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வார்களாயின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் விளக்கமறியிலில் வைக்கப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.