அகில இலங்கை மக்கள் முன்னணி, மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று யாழ். முனிஸ்வரா கோயில் முன்றலில் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் புத்தாண்டுக்குள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், மைத்திரியே, ரணிலே நல்லாட்சி வேடமிட்டு உலகை எமாற்றாதீர் எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர், இலங்கை அரசே லட்சம் மக்களை போரில் கொண்றது போதாதா எம் உறவுகளையும் சிறையில் கொல்லாதீர் உடனே விடுதலை செய், மைத்திரி அரசே ஐ.நா.வில் ஒப்புக்கொண்டது போல கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி எமது உறவுகளை உடன் விடுதலை செய், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாததைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
மேலும் குறித்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பிள்ளைகள், சிவில் சமூக அமைப்பினர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கோமகன், மன்னார் மாவட்ட மக்கள் பிரஜைகள் குழுவின் தலைவர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.