வித்தியா படுகொலை;சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள்:குற்றப்புலனாய்வு!

0
298
vithயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன்போது, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளை பிரிவு பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா மன்றில் வாசித்தார்.
மாணவி வித்தியாவை வழக்கின் ஆறாவது சந்தேகநபரான துசாந் ஒருதலையாக காதலித்தார். அதனை வித்தியா ஏற்காத காரணத்தால் ஐந்தாவது சந்தேக நபரான சந்திரகாசனுடன் சேர்ந்து கடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கு 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.
தங்களுக்கு உதவியாக ஏற்கனவே, களவு வழக்கொன்றில் வித்தியாவின் தாயார் சாட்சி சொல்லி பாதிக்கப்பட்ட இரண்டு பேரையும் துணைக்கு வைத்துக் கொண்டனர். அவர்களே, இவ்வழக்கின் 2ஆவது, 3ஆவது சந்தேக நபர்கள். அவர்கள் வித்தியா பாடசாலை செல்லும் போது, அவரை வழிமறித்துக் கடத்தினர்.
துசாந், சந்திரகாசன் ஆகியோர் வித்தியாவை பாலியல் வல்லுறவு செய்து பின்னர் கொலை செய்தனர். இச்சம்பவங்களை அடுத்து நேற்று கைது செய்யப்பட்ட 11ஆவது சந்தேக நபர் நேரில் பார்த்திருக்கின்றார். குறித்த நபர், கொலை இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து புங்குடுதீவுக்கு கஞ்சா கொண்டு போயிருக்கிறார்.
அங்கு தொடர்ந்து மூன்று தினங்கள் மதுவிருந்துடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை, சுவிஸ் குமார் ஏற்பாடு செய்திருக்கின்றார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலாவது, 4ஆவது, 7ஆவது, 8ஆவது சந்தேக நபர்கள் கொலையைத் தெரிந்தும் அதனை மறைத்தமை மற்றும் தடயங்களை அழிக்க உதவியமை போன்ற குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்.
கடற்படையினர் தான் இந்தக் கொலையைப் புரிந்தனர் என்பதைக் காட்டுவதற்காக கொலையை கொடூரமாக புரிந்தது போன்று அரலி பற்றைக்குள் வித்தியாவின் சடலத்தை கொண்டு சென்று கை, கால்களை இழுத்துக் கட்டியுள்ளனர்.’ என நிசாந்த சில்வா குறிப்பிட்டார்.
இன்றைய தினம் எந்தவொரு விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாததை அடுத்து, சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இக்கொலை வழக்குடன் சம்பந்தப்படாத நபர்களை விடுதலை செய்யுமாறு மன்றில் கோரினாhர்.
ஆனால், இதற்கு வித்தியா சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளான ஜே.வி.ரஞ்சித் குமார், சுகாஷ் ஆகியோர், விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட எந்தவொரு தடயப்பொருள் தொடர்பான அறிக்கைகளும் மன்றில் சமர்பிக்கப்படவில்லை. எனவே, சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது வாதத்தை முன்வைத்தனர்.
இன்றைய வழக்கின் முடிவில், ஊர்காவற்துறை நீதவான் .றியால், மாணவி வித்தியாவின் படுகொலை சகித்துக்கொள்ள முடியாத துன்பகரமான செயல். கடவுளின் கிருபையுடன் மாணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும். எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய விடயங்கள் மேலும் சிலருக்கு தெரியும் என குற்றப்புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எனவே, இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் 077 3291500 மற்றும் 077 8503002 ஆகிய இலக்கங்களுக்கு அறியத்தரவும் எனக்கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வழக்குடன் சம்பந்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here