தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுமே ராஜபக்சேவும், அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய அதிபர் பதவியேற்ற பிறகாவது, ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், இனப்பிரச்சனைக்கு அவர்கள் விருப்பப்படி தீர்வு காணும் படியும் இலங்கையில் அமையவுள்ள புதிய அரசுக்கு இந்திய அரசும், சர்வதேச சமுதாயமும் அனைத்து வழிகளிலும் அழுத்தம் தர வேண்டும்’’ என ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கையின் எதிர் காலத்தை நிர்ணயிப்பதற்கான அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் இலங்கையின் தற்போதைய அதிபர் ராஜபக்சயும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனாவும் போட்டியிடுகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்து வரும் இருநாட்களில் வெற்றிக்காக எவ்வித நாடகங்களும் அரங்கேற்றப்படலாம்; எவ்வளவு கொடிய வன்முறையும் கட்டவிழ்த்து விடப்படலாம். தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நேற்று பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா பங்கேற்ற கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலே இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்களான ராஜபக்சே, மைத்ரிபால சிறீசேனா ஆகிய இருவருமே தமிழர் நலனுக்கு எதிரானவர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இலங்கைப்போரில் அப்பாவி தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை கொடூரமாக படுகொலை செய்ததுடன், மீதமுள்ள தமிழர்களை இன்றளவும் வாழ விடாமல் கொடுமைப் படுத்திக்கொண்டிருக்கும் கொடியவன் தான் ராஜ பக்சே. அவரை எதிர்த்து போட்டியிடும் சிறீசேனா வானத்திலிருந்து குதித்து வந்த அப்பழுக்கற்ற அமைதி விரும்பி அல்ல. 3 மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்சே அரசில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்து, அனைத்துக்குற்றங்களுக்கும் துணை போனவர் தான். அவரை தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் சந்திரிகாவும், ரணில் விக்கிரமசிங்கேவும் தமிழருக்கு செய்த கொடுமைகள் இன்னும் 10 நூற்றாண்டுகள் ஆனாலும், மறந்து விடக்கூடியவை அல்ல.
சிறீசேனா நேற்று அளித்த நேர்காணலில் கூட, ‘‘தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற மாட்டேன்; பவுத்த மதத்தை தூக்கிப்பிடிப்பேன்’’ என்று தான் கூறுகிறாரே தவிர, தமிழருக்கு ஆதரவாகவோ அல்லது ஆறுதலாகவோ ஒரு வார்த்தைக்கூட கூறவில்லை. இருவருக்குமே சிங்கள வாக்குகள் தான் இலக்காக இருக்கின்றன.
எனினும், தமிழர்களை பொறுத்தவரை இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பது தான் மிகவும் முக்கியமாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை செய்த போது கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட்டு, தமிழர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
யாழ்ப்பாணம் கூட்டத்தில் பேசும் போது, தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான என்னை ஆதரியுங்கள் என்று கூறினார். இதன் மூலம் தாம் யார் என்பதை ராஜபக்சே உணர்த்தியுள்ளார். அவர் பிசாசு என்பது மட்டுமின்றி, அந்த கொடிய பிசாசால் தமிழர்களுக்கு கேடு தான் விளையும்; நன்மை விளையாது என்பதும் யாவருக்கும் தெரியும். இத்தகைய சூழலில், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை ஈழத்தமிழர்கள் வீழ்த்த வேண்டும்.
தேர்தலில் வீழ்த்தப்படுவது மட்டுமே அக்கொடியவனுக்கு தண்டனையாகி விடாது. தமிழர் வாழும் பகுதிகளில் பரப்புரை செய்த போது, இனப்படுகொலையில் தமக்கு உள்ள பங்கு குறித்து மறைமுகமாக ராஜபக்ச கூறியதையெல்லாம், அவரது வாக்குமூலமாக கருதி, அவரை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதற்கான பணிகளை இலங்கையில் அமையவுள்ள புதிய அரசுடன் இணைந்து இந்தியாவும், உலக சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால், ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாகவும், அவரது உடைமைகளில் பெரும்பாலானவை வாகனங்கள் மூலம் வெளிநாடு கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தப்பிச்செல்வதை அனுமதிக்கக்கூடாது. இலங்கையில் உள்ள ராஜபக்ச மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள், ராஜபக்ச சகோதரர்களின் பாஸ்போர்ட் ஆகியவை உடனடியாக முடக்கப்பட வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுமே ராஜபக்சேவும், அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய அதிபர் பதவியேற்ற பிறகாவது, ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், இனப்பிரச்சனைக்கு அவர்கள் விருப்பப்படி தீர்வு காணும் படியும் இலங்கையில் அமையவுள்ள புதிய அரசுக்கு இந்திய அரசும், சர்வதேச சமுதாயமும் அனைத்து வழிகளிலும் அழுத்தம் தர வேண்டும்’’என்று கூறியுள்ளார்.