முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது.
மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.
அண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே என் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி…..
அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை.
“கிடுகு வேலி” எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன்.
ஈழநாட்டில வந்த “கிடுகுவேலி” வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.
அதோட விட்டனானே?
ஒரு கணக்கு வழக்கில்லாம செங்கை ஆழியானின் கதைகளைத் தேடி எடுத்துப் படிக்க முடிவுசெய்துகொண்டன். அப்ப என்ர வயசுக்கு மீறின கதைக்களனாகவும். எழுத்து நடையாகவும் செங்கை ஆழியானின் படைப்புக்கள் இருந்தாலும் ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு அவரின்ர எழுத்துக்களில இருந்தது.
முதல்ல இந்த வாசிப்புக்குத் தீனி போட்டது எங்கட கொக்குவில் இந்துக்கல்லூரி நூலகம். எனக்கும் அந்தக் கல்லூரி நூலகத்துக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசவேணுமெண்டால் ஒரு தனிப்பதிவே போடலாம். அதை இன்னொரு நாளைக்குச் சொல்லுறன். செங்கைஆழியானின்ர நாவல்கள் இருக்கிற அலுமாரி எதோ நான் குத்தகைகு எடுத்த மாதிரிப் போட்டுது. அவரின்ர நாவல்களின்ர முதல் பக்கத்தில என்னென்ன நாவல்கள் இது வரை வெளிவந்தன என்ற பட்டியல் இருக்கும் அதை அளவுகோலாக வச்சுத் தான் ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தேடிப் படித்தேன்.
ஒரு நாள் நூலகத்தின் புத்தகச்சுரங்கத்திலே எனக்குக் கிடத்தது ஒரு பழைய சிறுகதைத்தொகுதி. 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட “விண்ணும் மண்ணும்” எண்ட சிறுகதைத்தொகுதி தான் அது. யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தம் சிறுகதைகளால் நிரப்பியிருந் தார்கள்.பின்னாளில் அதில் எழுதிய அனைவருமே ஈழத்தின் இலக்கிய முன்னோடிகளாகத் தடம்பதிருந்தார்கள். நாவல் மூலம் எனக்கறியப்பட்ட செங்கை ஆழியான் நல்ல சிறுகதைகளையும் எழுதாமல் விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டிகொடுத்துவிட்டது அந்நூல்.
இப்பொது எனக்கு புதிதாக ஒரு பிரச்சனை.
செங்கையாழியானின் நாவல்களை மட்டுமல்ல சிறுகதைகளையும் விடக்கூடாது எண்டு முடிவெடுத்துப் பள்ளிக்கூட நூலகத்தில இருந்த மல்லிகை போன்ற சஞ்சிகைகள் பக்கம் பாய்ந்தேன்.
நூலகராக இருந்த தனபாலசிங்கம் மாஸ்டர் எனக்குப் பெரிதும் கை கொடுத்தார். அவரிப் பொறுத்தவரை நூலகத்துக்குள்ள பெடியளோட அலம்பிகொண்டிருக்காமல் புத்தகங்களோட பேசிற ஆட்களைக் கண்டால் வலு சந்தோசம். எனக்கிருந்த புத்தகத்தீனிக்கு அவர் தான் சரியான ஆளாக இருந்தார்.
நூலகம் கடந்து என் வகுப்பறைக்கு போகும்போது என்னைக் கண்டால் மனுஷன் விடமாட்டார்.
” பிரபாகர், மல்லிகை புதுசு வந்திருக்கு” என்று நூலக வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சொல்லிப்போட்டு ஏதோ ஒரு பெரிய கடமையை முடிச்ச திருப்தியில் போவார்.
வீரகேசரி பிரசுரங்கள் எண்டு செங்கை ஆழியானின் ஒருசில நாவல்கள் எனக்குக் கல்லூரி நூலகத்தில இருந்து எனக்குக் கிடைத்தன.
இருந்தாலும் அப்போது எனக்கிருந்த இலக்கு இவரின் எல்லாப் புததகங்களையும் படித்து முடிக்க வேணும் எண்டு. எப்படி இது சாத்தியம் என்று நான் நினைத்தபோது ஒருநாள் அதுவும் கைகூடியது இன்னொரு சந்தர்ப்பத்தில்.
அண்ணாகோப்பிக்காறர் வீட்டுப் பெடியளோட தான் என்ர பின்னேர விளையாட்டு. ஒருநாள் இப்பிடி நான் விளையாடி முடிச்சு வரேக்க , அண்ணாகோப்பி நிறுவனத்தில வேலை செஞ்ச மேகநாதன் எண்ட மலையகப் பெடியன் வேலை முடித்துக் களைப்பாறும் தருணத்தில் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். நானும் பழக்க தோஷத்தில (?) என்ன புத்தகம் வாசிக்கிறார் என்று எட்டிப்பார்த்தபோது எனக்கோ ” கண்டேன் சீதையை” எண்டு கத்தவேணும் போல ஒரே புழுகம்.
இருக்காதே பின்னை, அவன் வாசித்துகொண்டிருந்தது செங்கை ஆழியானின் ” இரவின் முடிவு” எண்ட நாவல்.
“இஞ்சை..இஞ்சை… கெஞ்சிக்கோக்கிறன், நான் ஒருக்கா உதை வாசிச்சிட்டுத் தரட்டோ” என்று யாசித்தேன்.
அவனோ ” சேச்சே.. இது இரவல் புத்தகம் , கொடுக்கமுடியாது” என்று முரண்டு பிடித்தான். நானோ விடவில்லை.
என் விக்கிரமாதித்தத் தனத்தைப் பார்த்த அவன் ஒரு படி கீழே வந்து ” சரி சரி, புத்தகம் தரலாம்,ஆனால் பகலில நீங்க வாசிச்சிட்டு பின்னேரம் கொடுக்கவேணும்” என்ற நிபந்தனையைப் போட்டான். ஏனெண்டால் பின்னேர வேலை முடிந்து வந்து அவன் அதை வாசிக்க வேணும்.
மூண்டாம் தவணை விடுமுறை காலம் என்பதால் பெடியளோட போய் விளையாடும் நேரத்தின் பகலிலை “இரவின் முடிவு” நாவலை வாசிக்கப் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு நாள் பின்னேரம் கைமாறும் புத்தகம் அடுத்த நாள் மீண்டும் என் கைக்கு வரும்.
என்னுடைய நம்பகத்தன்மையைக் கண்ட அவனும் பிரளயம், ஆச்சி பயணம் போகிறாள், காட்டாறு, யானை, ஓ அந்த அழகிய பழைய உலகம், கங்கைக்கரையோரம் , அக்கினிக்குஞ்சு என்று செங்கை ஆழியானின் நாவல்கள் ஒவ்வொன்றாகத் தந்தான். சில நாட்களில் ஒரே மூச்சாக நான் முழு நாவலையும் படித்து முடித்துக் கொடுக்கும் போது வியப்பாகப் பார்ப்பான் அவன்.
பாவம், இவனுக்கு ஏதாவது நன்றிக்கடன் செய்யவேணும் எண்டு நினைத்து என்னிடமிருந்த ராணி காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் சித்திரக்கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்வேன். நான் ஒருபக்கம் செங்கை ஆழியானின் எழுத்தில் மூழ்க மேகநாதனோ ஜேம்ஸ் பொண்ட், ஜானி போன்ற துப்பறியும் சிங்கங்களின் கையில் அகப்பட்டுவிட்டான்.
எதோ ஒரு வெறித்தனமான காரியமாக பூபாலசிங்கம், சிறீலங்கா புத்தகசாலை எண்டு ஒருகாலத்தில் அலைந்து செங்கை ஆழியானின், சிறுகதை, கதை, கட்டுரை எனத்தேடியெடுத்து வாசித்தேன், திரும்பத்திரும்பச் சிலவேளை.
ஒரு கட்டத்தில் அவரின் ஒரு சில கைக்கெட்டாத சில படைப்புக்கள் எனக்குக் கிடைக்காது, அவர் எழுதிய “பூமியின் கதை” உட்பட புவியியல் வரலாற்றுப் படைப்புக்களைப் படித்தேன். வேறெந்த எழுத்தாளனின் படைப்பையும் தொட்டுப்பார்க்க விரும்பாத காலம் அது.
இப்ப நினைச்சுப் பார்த்தாலும் என்ற இந்தச் செய்கை ஒரு வியப்பாக இருந்தாலும், இண்டைக்கும் என்னால நினைச்சுப்பார்க்க வைக்குமளவுக்கு எப்படி அவரின் படைப்பைக்கையாண்டார் எண்டதை அவரின்ர சில கதைக் கருக்கள் மூலமே சொல்லுறன்.
ஆச்சி பயணம் போகிறாள் – யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப்பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது.
யானை – ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை
ஓ அந்த அழகிய பழைய உலகம் – ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரீகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தின்னும் கதைப்புலன்.
வாடைக்காற்று – நெடுந்தீவின் புவியியற்பின்னணியில் காதலும் மீனவரின் வாழ்வியலும் கலந்த கதை (என் அடுத்த விமர்சனப்பதிவாகத்தருகிறேன்)
கிடுகுவேலி – புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப்பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக்காட்டுகின்றது.
முற்றத்து ஒற்றைப் பனை – சோளகக்காற்றில் காலம் காலமாகப் பட்டம் விட்ட, இன்னும் விட ஆசைப்படுகின்ற ஒரு முதியவரின் மனவியலைக் காட்டுகின்றது.