இலங்கை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சம்பவ நேரம் அனந்தி வீட்டில் இருந்ததாகவும் கற்கள் கூரையின் மீதும், முன்கதவு மற்றும் முன்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறில் என்பவற்றின் மீது வீழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒன்றரை மணியளவில் கூரையின் மீது முதலில் சரமாரியாக கற்கள் வீசப்பட்டதாகத் தெரிவித்த அனந்தி, பின்னர் முன்கதவு ஜன்னல் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று தெரியவில்லை என தெரிவித்த அவர், இந்தச் சம்பவம் தனக்கு உயிரச்சுறுத்தல் விடும் வகையிலேயே நடத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போதும், தேர்தல் பிரசாரங்கள் முடிவுற்ற நிலையில் தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போலவே, ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவுற்றதையடுத்து. நள்ளிரவுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக தொலைபேசி மூலம் முறையிட்டதையடுத்து, காவல்துறையினர் தனது வீட்டிற்கு வந்து நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் தன்னிடம் வாக்குமூலத்தையும் பெற்றுச் சென்றதாகவும், விடியும் வரையில் காவல்துறையினர் காவல் இருந்து பாதுகாப்பு வழங்கியதாகவும் அனந்தி தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு குறித்து, அனந்தி அண்மையில் கடும் விமர்சனம் வெளியிட்டிருந்தார் என்பதும், தொடர்ச்சியாகவே இவருக்கு அரச தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.