கோடரியால் மனைவியை கொத்திக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை. மாணவியின் படுகொலை யுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் என நாளாந்தம் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது.
இவ்வாறு தண்டனைகள் வழங்கப்படுகின்ற போதிலும் குற்றச்செயல்கள் குறையவில்லையாயின் தண்டனைகள் குற்றச்செயல்களைக் குறைக்கமாட்டா என்பதும், மாறாக பாதிக்கப்பட்டவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் தண்டனைகள் அமைவதாகவுமே கருத முடியும்.
ஆக, தண்டனைகள் குற்றச்செயல்களைக் குறைக்கவில்லை எனில் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்குரிய வழிமுறையை கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழியாகும்.
நாளுக்குநாள் நம் மண்ணில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதன் அடிப்படையில், எங்கள் மண்ணில் ஆன்மிகமும் பண்பாட்டு விழுமியங்களும் தேய்வடைந்து விட்டன என்பதையே உறுதி செய்துகொள்ள முடியும்.
ஒரு காலத்தில் ஆலயங்களில் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்ற முறைதான் எல்லாக் குற்றச் செயல்களையும் தடுத்து வைத்திருந்தது.
ஆலயத்தில் பொய்ச் சத்தியம் செய்வது இறை நீதிக்குப் பங்கம். அது நம் வாழ்க்கையில் பெரும் பாதிப் புக்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைகள் பாவ பழிகளை செய்வதிலிருந்து பாதுகாத்தது.
இறைவழிபாடு, சமய நம்பிக்கை, பாவம் செய்யக் கூடாது, மற்றவர்களுக்குத் தீங்கு செய்தால் அது ஊழ் வினையாக நம்மை உறுத்தும், நம்பிக்கைத் துரோகம் இழைத்தலாகாது, பஞ்சமா பாதகங்களைச் செய்தால் அது எம் சந்ததியைச் சூழும் என்ற நம்பிக்கைகள் நம்மை வழிப்படுத்தின.
ஆனால் இன்று நிலைமை வேறு. இறை நம்பிக்கை என்பது அருகிவிட்டது. எப்படியும் பொருள் ஈட்டலாம்; அதற்கு எத்தகைய சூழ்ச்சிகளையும் செய்யலாம். இவை வியாபாரத் தந்திரம் என்று பொருள்படுமே அன்றி பாவவினை என்று யாரும் நினைக்கக் கூடாது. என்பதாக நிலைமை மாறிவிட்டது.
சுருங்கக் கூறின் ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் கருதிய பாவ பழிகள், சூழ்ச்சிகள் இன்று பொருளாதாரத் தந்திரோபாயங்களாகவும் அரசியல் ராஜதந்திரமாகவும் போர் நுட்பங்களாகவும் காட்டப்படுகின்றன.
இதனால் எங்கும் அதர்மச் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதன் விளைவுகள் தான் நாளாந்தம் நாம் அறிகின்ற பாலியல் வன்மங்களும் கொலைகளும் மற்றவர்களின் சொத்துக்களை அபகரிப்பதுமாக நடந்து கொள்கின்றன.
எனவே இத்தகைய நிலைமைகளை மாற்றி மீளவும்; இறை நம்பிக்கை, பண்பாட்டு ஒழுக்க விழுமியம், பாவபுண்ணியம் என்ற நம்பிக்கைகள், தர்மத்தின் வழியில் நடப்பதன் மூலம் இன்பமான வாழ்வை வாழலாம், பஞ்சமா பாதகங்களை அறவே கைவிட வேண்டும் என்ற சிந்தனைகளை நம் மாணவர்களிடம் ஏற்படுத்திவிட வேண்டும்.
இத்தகைய உயர் சிந்தனைகள் நிச்சயம் எங்களின் எதிர்கால வாழ்வில்; குற்றச் செயல்களும் இல்லை, தண்டனைகளும் இல்லை என்ற சூழமைவை ஏற்படுத்தும் என்பதால் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள் என எங்கும் அறக்கருத்துக்களை விதைக்கின்ற நுட்பங்களை அமுல்படுத்துவதே ஒரே வழியாகும்.
நன்றி :வலம்புரி ஆசிரியர் தலையங்கம்