வடமராட்சிக் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் கண்டனப்போராட்டம் இடம்பெற்றுள்ளதுடன் வடமராட்சிக்கிழக்கில் பூரண ஹர்த்தாலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. போரின் வடுக்களையும் இயற்கை அனர்த்தத்தின் வலிகளாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிக் கிழக்கில் இதுவரை எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
கரடுமுரடான பாதைகளின் மத்தியிலே மக்கள் தங்கள் வாழ்க்கையை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறார்கள். தேர்தல் காலத்தில் மட்டும் தங்களைத்தேடி வருகின்ற அரசியல்வாதிகள் அபிவிருத்தி என்கின்ற மாயமானைக்காட்டி வாக்குப்பிச்சை கேட்பதும் பின்னர் தேர்தலில் வென்றதும் எங்களைத்திரும்பிக்கூட பார்க்காமல் நிற்கின்ற நிலையை நாங்கள் காண்கிறோம்.
இதைவிட எமது மக்களுக்கான அடிப்படைப்பிரச்சனைகளைக்கூட கவனிக்காதவர்கள் இப்பொழுது எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் ஓர் செயலாகவே கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் போராட்ட காரர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக இத்திட்டம் நிறுத்தப்படவேண்டும் வடமராட்சிக்கிழக்கின் அனைத்து வீதிகளும் புனரமைக்கப்பட வேண்டும். எனவும் போராட்டக்காரர்கள் பெரும் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வடமராட்சிக் கிழக்கை மீண்டும் வறுமையாக்காதே, 25 ஆண்டுகால அகதி வாழ்க்கை காணாத எமக்கு, மக்களைக்காப்பாற்ற வேண்டிய அரசே நீ எம் வாழ்வாதாரத்தை அழிப்பது நியாயமா?, வாக்குகளை பெறவும் வளங்களை அள்ளவும்தான் வடமராட்சி கிழக்கா? , எங்களின் வயிற்றிலடித்து உங்கள் வாழ்க்கையை உல்லாசமாக்காதீர்கள். என்ற பல சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் பிரதேச செயலர் ஊடாக அரச அதிபருக்கு மகஜரும் வழங்கப்பட்டது.