அரசியலானது எங்களை பிரித்து என்ன குறிக்கோளுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை மறக்க வைத்திருக்கிறது. எங்களுடைய தனித்துவமான அரசியல் கட்சி ரீதியான ஏதோ எண்ணங்கள் எம்மை பிரித்து வைத்திருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும் நோக்கம் வடமாகாணத்தை விருத்தி செய்வது என்று இருக்கும் போது அதற்கு இடமளிக்காது கட்சி ரீதியிலான பிரச்சினைகளில் ஈடுபடுவதால் எங்களுக்கிடையே பலவிதமான முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சில தசாப்தங்கள் முன் வடபகுதியில் இயங்கிய அலுவலகங்களும் ஏனைய மாகாணங்களில் இயங்கிய அலுவலகங்களுக்கு முன்மாதிரிகையாக விளங்கின. ஆனால் இன்றைய நிலையோ எம்மை கையாலாகாதவர்களாக மாற்றிவிட்டது. எந்தவொரு விடயத்தை எடுத்தாலும் மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாணத்தைக் கேட்டுப்பாருங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு வலுவான காரணம் நாம் சேவையில் இணைந்த பின் தொடர்ந்து கற்கின்ற பழக்கத்தை அடியோடு மறந்த விடுகின்றோம்.
ஆகவே எந்த சேவையில் இருந்தாலும் கற்கின்ற பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்தால் முன்பு இருந்த நிலைக்கு நாம் உயர்வு பெறுவோம் என்றார்.