இரத்தினபுரி கஹவத்த நகரில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது நேற்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதேவேளை உதவித்தேர்தல் ஆணையாளர் உட்பட தேர்தல் அதிகாரிகள் மீதும் திரு கோணமலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் இரத்தினபுரியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்ன கோன் தெரிவித்தார்.
ஜீப்களில் வந்த சிலர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர் மூன்று எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் கஹவத்த நகரில் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த கீர்த்தி தென்னகோன், அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆளும் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார அலுவலகமொன்றை தாக்கி தீக்கிரையாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக அயகம , கம்போல, ககிராவ, கலேவெல, வெல்லம்பிட்டி, கொலன்னாவ ஆகிய பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
அதேவேளை திருகோணமலை நகரில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த உத வித் தேர்தல் ஆணையர் உட்பட தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி தேர்தல் ஆணை யரால் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை நகருக்கு வெளியே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரொருவரின் பிரசார அலுவலகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்கள் தேர்தல் அதிகாரிகளின் கைத் தொலைபேசிகளையும் பறித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர் கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஜனா திபதி தேர்தலில் பொது எதிரணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமது ஆதர வாளர்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆரையம்பதி மற்றும் அரசடித்தீவு ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரு வௌவேறான சம்பவங்களில் இருவர் தாக்குதலுக்குள்ளாகி அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரி விக்கின்றார்.
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக் குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யுமாறு பெல்மடுல்ல நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்காக கஹவத்த பகுதியில் நேற்று அதிகாலை மேடை அமைத்துக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற் கொண்ட குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, கஹவத்த பிரதேச சபை தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது.