முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் முதலமைச்சரால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் எனத் தெரிவித்த நளினி,7 பேரின் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, அனுமதிக்கப்பட்டார்.
இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு அழைத்து வரப்பட்ட நளினி, அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்வதற்கு அனுமதித்தமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்த நளினி, 7 பேரின் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தினந்தினம் செத்து பிழைக்கிறோம் எனத்தெரிவித்த நளினி,அப்பாவின் இறுதி சடங்கில் பங்கேற்க ஒரு வாரம் சிறை விடுப்பு அனுமதி கேட்டிருந்ததாகவும் ஆனால் 8 மணி நேரம் மட்டுமே தந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய சிறைகளில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒரே பெண் தானே என்றும் குற்றம், தண்டனை என்று எல்லாவற்றையும் தாண்டி தங்களுக்கான நீதி அரசியல் காரணங்களுக்காக மறுக்கப்படுகிறது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மரணச்சடங்கில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கருத்து தெரிவிக்கும் போது, 7 பேரின் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் தாங்கள் முன்னெடுப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது தொல் திருமாவளவனுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் வன்னி அரசு உடனிருந்தனர். இதில் நளினியின் தாய் பத்மா மற்றும் தம்பி ரவி ஆகியோர் இதே வழக்கில் சுமார் 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.