நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியலில் பங்குபெறுவதற்கான மக்களின் உரிமை மதிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் மீது துன்புறுத்தலும், வன்முறையும் இடம்பெறுவது ஆழ்ந்த கவலையளிக்கின்றது.
இலங்கை மக்கள் அரசியலில் பங்குகொள்வதற்கு தங்களுக்குள்ள உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை, வன்முறைகளை எதிர்கொள்ளாமல் அனுபவிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசிபிக்கிற்கான பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று வாக்களிப்பை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களும் கவலையளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.