விழிப்புணர்வோடு ஒவ்வொரு பிரஜையும் வீதியில் இறங்கி போராடுங்கள் !!!

0
292


Kanamal-po‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று சிந்திக்கும் சுயநலப்போக்கும், தனது வீட்டு முற்றம் வரைக்கும் பிரச்சினை தேடிவரும் வரைக்கும் காத்திருக்கும் மனோநிலையுமே கூட்டு வன்புணர்வு படுகொலைகளுக்கு மூலகாரணிகள் என்று ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும்’, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் குடும்பங்களும்’ தமிழ் சமுகத்தை கடுமையாக சாடியுள்ளன.
சரண்யா, வித்தியா, சேயா, கரிஸ்ணவிகளுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை ‘நாளை எனது வீட்டு பெண் பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு?’ என்பதை சிந்தித்து ஒவ்வொரு குடும்பமும் (பிரஜையும்) கலக்கத்தோடும் – விழிப்புணர்வோடும் சமுக அநீகளுக்கு எதிராக, பெரும் மக்கள் கூட்டமாக – கூட்டுக்குடும்பமாக வீதியில் இறங்கிப்போராட வரவேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாணவி கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு வவுனியா மாவட்டத்தில் 23.02.2016 அன்று நடைபெறவுள்ள கவனவீர்ப்பு அழுத்த போராட்டத்துக்கும், மறுநாள் 24.02.2016 அன்று இடம்பெறவுள்ள இயல்புநிலையை முடக்கும் முழுஅடைப்பு கர்த்தாலுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்து அவர்கள் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையிலேயே மேலேகுறித்தவாறு தெரிவித்துள்ளனர்.
அந்த கூட்டு ஊடக அறிக்கையின் முழுவிவரமும் வருமாறு:
கூட்டு ஊடக அறிக்கை:
22.02.2016

நாளை ‘எனது பிள்ளை’ க்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? என்ற விழிப்புணர்வோடு ஒவ்வொரு பிரஜையும் வீதியில் இறங்கி போராடுங்கள் !!!

தமிழ் பண்பாட்டுச்சமுகம் மே 2009 க்குப்பின்னர் ‘சுயஒழுக்கம் – சுயகட்டுப்பாட்டை’ இழந்து, தரம்தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் கண்டு, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும்’, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் குடும்பங்களும்’ மிகுந்த கவலையும் – பயமும் கொண்டுள்ளோம்.
தமது ஆட்சி நிலத்தில், தமக்கே உரித்தான மொழி, கலை, கலாசாரம், பாரம்பரியம், மரபுரிமைகளை பாதுகாத்து அடையாளம் பெற்ற தமிழ் இனம், தற்காலத்தில் நெறிகெட்டு போகும் நடத்தைகளால் பிற இனங்களுக்கு முன்னே கூனிக்குறுகி அவமானப்பட்டு நிற்கும் நிலைமைகள் கண்டு கோபமும் கொள்கின்றோம்.
தமிழர் பாரம்பரிய பண்பாட்டுத்தொடர்ச்சியான கூட்டுக்குடும்ப வாழ்க்கை – பழக்க முறைமைகள் சிதைவடைய போரும் அதைத்தொடர்ந்த தடையற்ற – கட்டுப்பாடற்ற நவீனத்துவ ஊடுருவல்களும் ஒரு காரணமாகவிருந்தாலும் கூட, இந்த மாபெரும் பண்பாட்டுச்சிதைவுக்கு சக்தியற்ற – பயனற்ற தமிழ் அரசியல் தலைமைகளும் காரணம் என்பதையும் நாங்கள் மறுப்பேதுமின்றி ஒப்புக்கொள்கின்றோம்.
தமிழ்மொழி பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களால் பெண்கள் அதிகமாகவே பாதிக்கப்பட்டும், மானப்பங்கப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இத்தகைய குரூர சம்பவங்களுக்கு தாராளமயமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்களும், ஆபாச காணொளிகளும் இரண்டாம்தர காரணிகளாகவே அமைகின்றன.
சமகாலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பாடசாலை மாணவிகள் வரையிலும், அதிலும் பூப்பெய்யாத சிறுமிகள் வரையிலும், அதுவும் கூட்டு வன்புணர்வு படுகொலைகள் வரையிலும் வந்து நிற்கின்றன. சரண்யா, வித்தியா, சேயா, கரிஸ்ணவி என்று இந்த பட்டியல் நீளுகின்றது. இவ்வாறான சமுக விரோத குற்றங்களுக்கு – நடத்தைப்பிறழ்வுகளுக்கு தமிழ் சமுகத்தைச்சேர்ந்த ஒவ்வொரு பிரஜையும் பெருத்த குற்ற உணர்ச்சியுடன் பொறுப்பேற்கவேண்டியவர்களாகவே உள்ளோம்.
‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று சிந்திக்கும் சுயநலப்போக்கும், தனது வீட்டு முற்றம் வரைக்கும் பிரச்சினை தேடிவரும் வரைக்கும் காத்திருக்கும் மனோநிலையுமே இவற்றுக்கெல்லாம் மூலகாரணிகளாகும் !!!
இந்த சுயநலப்போக்கிலிருந்தும், தனிநபர் நலச்சிந்தனையிலிருந்தும் தமிழ்ச்சமுகம் விடுபட வேண்டும். அநீதிக்கு எதிராக தமிழ்ச்சமுகம் கோபப்பட பழகவேண்டும்.
தத்தமது (தனிநபர்) நலன் சார்ந்து சிந்திக்காமல் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் நலன் சார்ந்தும், பாதுகாப்பு சார்ந்தும் ஒரு மக்கள் கூட்டமாக சிந்திக்க வேண்டும்.
இன்று சரண்யா, வித்தியா, சேயா, கரிஸ்ணவிகளுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை, இழைக்கப்பட்ட அநீதி, ‘நாளை எனது வீட்டு பெண் பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு?’ என்பதை சிந்தித்து ஒவ்வொரு குடும்பமும் (பிரஜையும்) கலக்கமுற வேண்டும்.
இந்த கலக்கத்தோடும் – விழிப்புணர்வோடும் சமுக அநீகளுக்கு எதிராக, பெரும் மக்கள் கூட்டமாக – கூட்டுக்குடும்பமாக வீதியில் இறங்கிப்போராட வாருங்கள். வன்முறைகள் நாளை உங்களது வீடு தேடியும் வரலாம். நிச்சயம் வரும் !!! அதை இப்போதே முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கு படலை திறந்து வீதி வரைக்கும் வந்து போராடுவதை தவிரவும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் (பிரஜைக்கும்) வேறு வழியொன்று இருக்கவே முடியாது !!!
மாணவி கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு வவுனியா மாவட்டத்தில் 23.02.2016 அன்று நடைபெறவுள்ள கவனவீர்ப்பு அழுத்த போராட்டத்துக்கும், மறுநாள் 24.02.2016 அன்று இடம்பெறவுள்ள இயல்புநிலையை முடக்கும் முழுஅடைப்பு கர்த்தாலுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் சமவேளையில்,
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிவில் சமுக மனிதஉரிமை அமைப்புகளும், அந்தந்த மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் நீதிகோரி கண்டன – கவனவீர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது அவசியமானது என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும்’, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் குடும்பங்களும்’
Untitled-1
Untitled-2 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here