யாழ். கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் ஒரே இரவில் 7 வீடுகள் உடைத்து பெருமளவு நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் யாழ்.குடாநாட்டில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கொள்ளையர்கள் தமது முகம்களை கறுப்புத்துணியால் கட்டியபடி கூறிய ஆயுதங்களுடன் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் நேற்று முன் தினம் அதிகாலைமணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிகாலை வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் முதலில் இந்து குரு ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து இந்துமத குருவை தாக்கி காயப்படுத்தி விட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நீர்வேலி -கரந்தாய் பகுதியிலும் அதே கொள்ளையர் குழு 6 வீடுகளை உடைத்து உட்புகுந்து கொள்ளையிட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக கொள்ளை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,முகங்களை மறைத்துக் கொண்டு கம்பிகள், கைக் கோடரிகள், வாள் போன்றவற்றுடன் கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் சத்தம்போட கூடாது என அச்சுறுத்தி, வீட்டில் இருந்தவர்களை தாக்கி பொருட்கள், நகைகளை கொள்ளையிட்டார்கள்,நாங்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த போதும் அவர்கள் அதிகாலை 3 மணிக்கே சம்பவ இடத்திற்கு வந்தார்கள், அதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டார்கள் என கூறுகின்றனர்.
இதேவேளை குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கொள்ளையர்களால் சுமார் 50 பவுண் நகைகள் மற்றும் 25 லட்சத்திற்கும் மேல் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மேற்படி சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளைக்கும்பல் ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்டவர்களில் நால்வர் இளைஞர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக வீட்டார் தெரிவிக்கின்றனர். நாங்கள் கூக்குரல் இட்டிரிந்தால் அவர்கள் எம்மை கொலை செய்திருப்பார்கள், அந்த நிலையியே அவர்கள் நின்றதாக வீட்டார் அச்சத்துடன் தெரிவித்தனர்.
இதேவேளை இருசில தினங்களுக்கு முன்னர் யாழ்.பண்ணை பகுதியில் நடைபெற்ற கஞ்சா கடத்தலின் போது, இருபத்தியாறு கிலோக்கிராம் கஞ்சா யாழ்.பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு, பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன, இச்சம்பவத்தில் கைதான மூவரில் இருவர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.