பிரான்சில், புலம் பெயர் தமிழ்மக்களின் முன்னணிச் செயற்பாட்டாளர்களின் மீது திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்டுவரும் அரசியற்படுகொலைகள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை தாயக, தமிழக, உலகத் தமிழர்கள் மற்றும் பிரான்சு மக்கள் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதோடு, பிரான்சு அரசிடம் தமிழர்களின் உயிர்பாதுகாப்புக்கான உத்தரவாதத்தையும் , நீதியையும் வழங்குமாறு கோரி நிற்கின்றார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட மக்கள் பணியாளர்கள் மீதான அரசியற் படுகொலைகளும் , படுகொலைமுயற்சிகளும் பிரான்சு மண்ணில் புதியவை அல்ல! ஈழமுரசு பத்திரிகை ஆசிரியரும் மனிதவுரிமை ஆர்வலர்களுமான திரு. கந்தையா கஜேன்திரன் மற்றும் திரு. கந்தையா பேரின்பநாதன் ஆகியோர் 1996 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி என்றழைக்கப்படும் திரு. நடராசா மதீன்திரன் அவர்கள் 08/11/2012 அன்று ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இதன் தொடர்ச்சியாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இன்றைய பொறுப்பாளராக இருக்கும் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது கடந்த 17/02/2016 புதன் கிழமை இரவு அவரது வர்த்தகநிலையத்தில் வைத்து ஆயுததாரிகளால் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் நூலிழையில் காயங்களோடு உயிர் தப்பித்துக்கொண்டார்! இதற்கு முன்னரும் ஒருமுறை 19/06/16அன்று இவர் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பிரான்சு மண்ணில் தொடரும் அரசியல் படுகொலைகளும் படுகொலை முயற்சிகளும் பிரான்சுவாழ் தமிழ்மக்கள மத்தியில் பிரான்சு மண்ணிலும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத உயிர்பாதுகாப்பற்ற சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்ச உணர்வினைத் தோற்றுவித்துள்ளது.
எனவே இவ்வாறான அரசியற்படுகொலைகள், படுகொலைமுயற்சிகள், வன்முறைச்சம்பவங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் . குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதபடி உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் என்னும் கோரிக்கைகளை பிரான்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
ஊடகப்பிரிவு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை (MTE). 20/02/2016