பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு பரமலிங்கம் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் நேற்று வெள்ளிக்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. படுகொலை முயற்சி நடைபெற்ற Villeneuve-Saint-Georges நகரின் நகரசபை முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.
பிரெஞ்சு மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, போராட்டம் குறித்து அப்பகுதியில் வந்து சென்ற மக்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
அத்துடன், இப்படுகொலை முயற்சி குறித்தும், துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் காவல்துறை, நகரசபை மற்றும் உள்நாட்டு அமைச்சு அலுவலகம் ஆகியவற்றுக்கு மனுக்களும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இப்படுகொலை முயற்சிக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை தமிழ் வர்த்தக நிலையம் அதிகம் அமைந்துள்ள பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பாரிய மனித சங்கிலிப்போராட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் சத்தியதாசன் அவர்கள் போராட்டத்தின் முடிவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார்.