மீண்டும் ஆழஊடுருவும் படுகொலைக் கரங்கள் பிரான்ஸ் மண்ணில் தங்கள் ஆயுதக் கரங்களை நீட்டியுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன் கடந்த 08.11.2012 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பரிதி அவர்கள் பரிசில் உள்ள அலுவலகத்தின் முன்னால் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இப்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தற்போதைய பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் மீண்டும் உயிர்தப்பி இருக்கின்றார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் இவர் மீது படுகொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அப்போதும் இவர் காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். தற்போது இரண்டாவது தடவையாக இந்தப் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பரிதி அவர்களின் படுகொலையும், பரமலிங்கம் அவர்கள் மீதான படுகொலை முயற்சியும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை முற்றாகச் செயலிழக்க வைக்கும் ஒரு பாரிய நாசகார நடவடிக்கையாகவே பார்க்கமுடிகின்றது. ஏற்கனவே, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் மீதும் இவ்வாறான ஒரு படுகொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிப்பவர்களையும் அவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களையும் அச்சமடைய வைத்து ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளை முடக்குவதே எதிரியானவனின் நோக்கமாக உள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஓர் உறவுப் பாலமாக, புலம்பெயர்ந்த தமிழர்களின் பலம்பொருந்திய கட்டமைப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் நடமுறை அரசு செயற்பட்ட காலத்தில், தமிழீழத்தின் வெளிநாட்டுத் தூதரகங்களாகவே இந்தத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை எதிரியானவன் கருதினான். இதனால், அவற்றை செயலிழக்கவும், நிரந்தரமாக மூட வைப்பதற்கும் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டான். ஆனால், அவ்வவ் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு, மக்களமைப்பாகச் செயற்படும் இந்தத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை சிங்களப் பேரினவாத அரசால் எதிர்பார்த்துபோன்று செயலிழக்க வைக்கமுடியவில்லை.
2009 மே பாரிய இன அழிப்பின் பின்னர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்ட நிலையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களைத் தனது கைகளுக்குள் கொண்டுவந்து, அதனைச் செயலிழக்க வைக்க மீண்டும் முயன்று வருகின்றான். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டிருக்கின்றான். கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை மூளைச்சலவை செய்து, முன்னாள் போராளிகள் என்ற போர்வையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தான்.
பிரான்சில் இதற்குப் பெரும் தடையாக இருந்த பரிதி அவர்கள் மீது முதலில் ஒரு படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் முயற்சியில் அவர் காயங்களுடன் உயிர்தப்பினார். இதனால், அடுத்த முயற்சியை மிகவும் கவனமாகத் திட்டமிட்டு அவரைப் படுகொலை செய்தான் எதிரி.
இப்போது அதேபோன்றே பரமலிங்கம் அவர்கள் மீதும் இரண்டாவது படுகொலையை முயற்சியை எதிரியானவன் மேற்கொண்டிருக்கின்றான். அக்கொலைகாரர்களின் துப்பாக்கிகள் இலக்குத் தவறாது தாக்கியிருந்தால், இன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இன்னொரு பொறுப்பாளரையும் இழந்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். அவரது துரிதகரமான தற்காப்பு முயற்சியே இந்தப் படுகொலையில் இருந்து, காயங்களுடன் அவரைப் பாதுகாத்திருக்கின்றது.
முன்னதாக, எதிரியானவன் பிரான்சில் இயங்கிய தமிழ்த் தேசிய ஊடகத்தை சிதைப்பதிலும் அதிக கவனம் கொண்டிருந்தான். ஊடகத்தை செயலிழக்க வைப்பது அல்லது அதனைக் கையகப்படுத்துவது என இருவழி முயற்சியில் இறங்கிய எதிரியின் நடவடிக்கை, ஒரு கட்டத்தில் ஊடக இல்லத்தின் செயற்பாட்டாளர்கள் மீதான படுகொலை முயற்சியாகவும் மாற்றம் கண்டது. எனினும், பிரெஞ்சுக் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது.
எதிரியானவனின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானதாகவே பார்க்க முடிகின்றது. இந்திய இராணுவம் போரைத் தொடங்குவதற்கு முன்பாக தாயகத்தில் இயங்கிய முரசொலி, ஈழமுரசு, நிதர்சனம், புலிகளின் குரல் ஆகிய ஊடகங்களை அழித்துவிட்டே தனது அடுத்த கட்டப் போர் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. மக்களுக்கு உண்மைகள் சென்றடையும் வழிகளைத் தடுத்துவிட்டே தனது போரை இந்தியா கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதேபோன்றே பிரான்சிலும் ஊடகத்தை அழித்துவிட்டு, அல்லது ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை முடக்க முயன்றது. ஆனால், ஊடகத்தை முடக்கும் முயற்சி தோல்வி கண்டதால், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை நேரடியாகவே முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளமையே இந்தப் படுகொலை முயற்சி உணர்த்துகின்றது.
“யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு” சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துக்கொண்டிருந்த அதேநாளில்தான், பிரான்சில் இவ்வாறானதொரு படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது இங்கு முக்கியமானது.
மகிந்த காலத்தில் மட்டுமல்ல, தற்போதைய நல்லாட்சி என்று சொல்லப்படும் மைத்திரியின் ஆட்சிக் காலத்திலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறையவில்லை. ஆழஊடுருவும் அதன் படுகொலைக் கரங்களும் தங்கள் செயற்பாட்டை நிறுத்தவில்லை என்பதையே இந்தப் படுகொலை முயற்சி உணர்த்தி நிற்கின்றது. இந்தப் படுகொலை முயற்சியில் பங்கேற்றவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இதில் பங்கேற்றவர்கள் தமிழர்களாக இருக்கும் இடத்திலும் அவர்களை இயக்கும் இயங்குசக்திகள் அடையாளம் காணப்படாதவரை, இவ்வாறான படுகொலைகளும், படுகொலை முயற்சிகளும் ஓயப்போவதில்லை.
உலக நாடுகளின் உதவியோடு தாயகத்தில் இனஅழிப்பை வெற்றி கரமாக நிறைவு செய்து, விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிட்ட சிங்களப் பேரினவாத அரசின் ஆழஊடுருவும் படுகொலைக் கரங்களே இவை என்பதை ஊடக மையம் உறுதியாக நம்புகின்றது. இந்தப் படுகொலைக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழர்களின் பாதுகாப்பு இந்தப் புலம்பெயர்ந்த மண்ணில் உறுதிப்படுத்தப்படும் வரை, ஓயாது உழைக்குமாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ப.வேலுப்பிள்ளை
தலைவர்
ஊடக மையம்
http://www.sankathi24.com/sites/default/files/documents/MC%2019022016.pdf