யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் நேற்று விமானப்படையின் கிபிர் போர் விமானம் பறந்ததால் மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர்.
போர்க் காலத்தில் தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களைக் கொத்துக் கொத்தாக கொலை செய்த இந்தக் கிபிர் விமானம் தமிழ் மக்கள் மனதில் அச்சத்திற்குரிய வான்படைக் களமாக இடம்பிடித்தது.
இறுதிப் போரின்போது வன்னியில் கொத்துக் கொத்தாக குண்டுகளை அள்ளி வீசி மக்களைக் கொலை செய்ததால் இந்த போர் விமானத்தைக் கண்டாலே மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் போர் விமானம் யாழ். குடாநாட்டு வான் பரப்பில் பறந்ததால் இதைக் கண்ட மாணவர்களும் அச்சமடைந்தனர்.
மேலும் வன்னி பெருநிலப்பரப்பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற இறுதிப் போரின் போது கிபிர் விமானம் தாக்குதல் நடத்தியதற்கு பின் 7 வருடங்களின் பின்னர் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பறந்ததை காணக்கூடியதாக இருந்தது.